புதுக்கோட்டையில் 31 மோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்றவர் கைது




புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திருடி விற்ற மோட்டார் சைக்கிள்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்றவரை போலீஸார் இன்று (அக்.28) கைது செய்தனர்.

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போயின.

இதுகுறித்து மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை நகரக் காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நகரக் காவல் நிலையத்தினர் நேற்று முன்தினம் மேற்கொண்ட வாகனத் தணிக்கையின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் கூனரி தெருவைச் சேர்ந்த கதிர்வேலு மகன் கண்ணன் (42) என்பவரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 31 மோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணனை இன்று கைது செய்ததோடு, அனைத்து வாகனங்களையும் நகரக் காவல் நிலையத்தினர் பறிமுதல் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments