தீபாவளி சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு




தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை காலத்தில் குறிப்பாக சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 


அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல 16,540 சிறப்பு பேருந்துகளும், தீபாவளிக்குப் பிறகு பிற ஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னைக்கு வருவதற்கு 17,719 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,506 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும் தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர நவம்பர் 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,319 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து 12,719 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 4 நாட்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 17,719 பேருந்துகள் இயக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் சென்னையில் இருந்து வரும் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு;-

* மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

* கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். 

* தாம்பரம்(மெப்ஸ்) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பன்ருட்டி வழியாக கும்பகோனம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

* தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் போருர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், திண்டிவனம் மார்க்கமாக நெய்வேலி, வடலூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் செல்லும் பேருந்துகளும், திண்டிவனம் வழியாக கடலூர், புதுச்சேரி, சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

* பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆர்க்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

* கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, வேலாங்கன்னி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் பொதுமக்கள் முன்பதிவு செய்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 கவுண்டர்களும், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தி ல்2 கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவோ, அல்லது tnstsc official என்ற செயலி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments