புதுக்கோட்டை மாவட்டத்தில் 735 இடங்களில் மெகா முகாம்:ஒரே நாளில் 43 ஆயிரத்து 784 பேருக்கு தடுப்பூசி






புதுக்கோட்டை மாவட்டத்தில் 735 இடங்களில் மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 43 ஆயிரத்து 784 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 735 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் 1 லட்சத்து 11 ஆயிரம் டோஸ்கள் வந்தன. மேலும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் செலுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தன. கொரோனா தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பம்பர் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று மெகா முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர். 

43,784 பேருக்கு தடுப்பூசி

புதுக்கோட்டை நகரப்பகுதியில் அதிக அளவில் கூட்டமில்லை. வழக்கம் போல மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். கிராமப்புறங்களில் பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து வீடு, வீடாக சுகாதார பணியாளர்கள் சென்று தடுப்பூசி போட்டனர். மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாமில் மொத்தம் 43 ஆயிரத்து 784 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தன.

வடகாடு

வடகாடு பெரிய கடை வீதி அருகேயுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சுற்று சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டனர். முகாமில் திரளானோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு சென்றனர். முகாமில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

காரையூர்

காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக கீழத்தானியம், ஒலியமங்கலம், காரையூர் உள்பட பொன்னமராவதி தாலுகாவில் மொத்தம் 50 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தினார்கள். முகாமில் புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன், பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பொன்னமராவதி

பொன்னமராவதி, மேலைச்சிவபுரி, திருக்களம்பூர், தொட்டியம்பட்டி, வேகுப்பட்டி உள்ளிட்ட அனைத்து ஊராட்சியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் முதல், இரண்டாம் தவணை என மொத்தம் 2,330 நபர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மேலும் வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களை முகாமிற்கு அழைத்து வந்து தடுப்பூசி செலுத்த வைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். 

அன்னவாசல், கீரனூர்

அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கண்ணாமலைப்பட்டி, புல்வயல் உள்ளிட்ட 39 ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் தலைமையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். இதேபோல் அன்னவாசல் பேரூராட்சி, இலுப்பூர் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

கீரனூரில் நடந்த முகாமில் 376 பேர் கலந்துகொண்டு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு கொண்டனர். தடுப்பூசி முகாமை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டபாணி, குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசுகள்

கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று குளமங்கலம் பாரத பறவைகள் அறக்கட்டளை தன்னார்வ இளைஞர்கள் அமைப்பின் மூலம் அறிவிப்பு செய்தனர். அதேபோல நேற்று மாலை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பெயர்களை குலுக்கல் மூலம் தேர்வு செய்து வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக வழங்கினார்கள். நிகழ்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments