இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான கோட்டைப்பட்டினம் மீனவர் உடல் மீட்பு! சொந்த ஊருக்கு விரைவாக கொண்டுவரக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்!!இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான மீனவர் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலையும் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 2 மீனவர்களையும் சொந்த ஊருக்கு விரைவாக கொண்டுவரக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து விசைப்படகில் ராஜ் கிரண் (வயது 30), சுகந்தன் (23), சேவியர் (32) ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 18-ந்தேதி சென்றனர். இவர்கள் 3 பேரும், சுமார் 118 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையின் கப்பல், இவர்களது விசைப்படகு மீது மோதியதில் படகு கடலில் மூழ்கியது. இதில் 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.

இதையடுத்து சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்து இலங்கைக்கு அழைத்து சென்றனர். ராஜ்கிரண் என்ற மீனவர் மட்டும் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் இறந்த மீனவர் உடலையும், சிறைபிடிக்கப்பட்ட மற்ற 2 மீனவர்களையும் உடனே ஒப்படைக்கக்கோரியும், இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நேற்று முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் பெண்கள், கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், உயிரிழந்த ராஜ்கிரணின் மனைவி பிருந்தா மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே இறந்த மீனவரின் உடல் தங்களிடம் இல்லை என இலங்கை அரசு தெரிவித்ததாக பரவிய தகவலால் மீனவர்கள் குழப்பம் அடைந்தனர்.

ஆனால் நேற்று மாலை மீனவர் ராஜ்கிரணின் உடலை இலங்கை கடற்படையினர் மீட்டு இலங்கையில் உள்ள காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் அவரது உடல் யாழ்ப்பாணம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே கடலில் மீட்கப்பட்டதாக கூறப்படும் மீனவரின் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

ஆனால் இதை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். மீனவரின் உடல் மீட்கப்பட்டது தொடர்பாக இலங்கை அரசிடம் இருந்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை என்றும், சமூக வலைத்தளத்தில் பரவிய மீனவரின் உடல் புகைப்படத்தை வைத்து அவர்தான் என சரியாக அடையாளம் காணமுடியவில்லை. அதனால் மீட்கப்பட்டதாக கூறப்படுவது ராஜ்கிரணின் உடல்தானா என்றும் உறுதி செய்ய முடியவில்லை. இலங்கை அரசிடம் இருந்து மீனவர் உடல் மீட்கப்பட்டதாக தெரிவித்தால் மட்டுமே தங்களால் உறுதிபட சொல்ல முடியும் என தெரிவித்தனர்.

இதற்கிடையே மீனவர் உடல் மீட்கப்பட்டது தொடர்பாக ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, மீனவர் ராஜ்கிரணின் உடல் மீட்கப்பட்டுவிட்டதாகவும், அது யாழ்ப்பாணம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் கூறும்போது, நாளை (அதாவது இன்று) மீனவர் உடலை இலங்கை அரசு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் உள்ளதாகவும், அதன்பிறகு அவரது உடல் இந்திய கடற்படை கப்பல் மூலம் கோட்டைப்பட்டினத்துக்கு கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே கடலில் மூழ்கி பலியான மீனவர் ராஜ்கிரணின் உடலை மீட்டதாக இலங்கை கடற்படை நேற்று செய்தி வெளியிட்டது. அதேநேரம் இது குறித்து கூடுதல் விவரம் எதுவும் இலங்கை கடற்படை வெளியிடவில்லை.

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீனவரின் உடலை தாயகம் கொண்டு வரும் வரை இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள் என விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் நேற்று விசைப்படகு மூலம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி தளம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments