தமிழகத்தில் 25, 26-ந் தேதிகளில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!தமிழகத்தில் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் மீண்டும் மழை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த மாதம் (நவம்பர்) தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பரவலாக பெய்த மழையால், பல்வேறு இடங்களில் அணைகள், ஏரிகள், ஆறுகள், குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் இன்றளவும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 24-ந் தேதி (புதன்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), 24-ந் தேதியும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து 25-ந் தேதியும், 26-ந் தேதியும் மீண்டும் தமிழகத்தில் மழை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், திருபுவனம், ஜமுனாமரத்தூர் தலா 7 செ.மீ., புதுக்கோட்டை, பள்ளிப்பட்டு, பந்தலூர், வாணியம்பாடி தலா 6 செ.மீ., நாட்றம்பள்ளி, திருச்செங்கோடு தலா 5 செ.மீ., திருப்போரூர், ஆலங்காயம், அய்யம்பேட்டை, பெரியார், ஆம்பூர் தலா 4 செ.மீ., தம்மம்பட்டி, குடியாத்தம், ஆத்தூர், சங்கராபுரம், காட்பாடி, புலிப்பட்டி, மாமல்லபுரம், ஆரணி, திருப்பத்தூர், மானாமதுரை, தாம்பரம், சத்தியபாமா பல்கலைக்கழகம், ஈரோடு, மணப்பாறை தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தற்போது வரை தமிழகம் பெற்று இருக்கக்கூடிய இயல்பான மழை அளவு 30 செ.மீ. ஆகும். ஆனால் இயல்பை விட 68 சதவீதம் அதிகமாக 52 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments