தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம்:குற்ற சம்பவங்களை தடுக்க40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்புறக்காவல் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டையில் ஜவுளிகள், பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் கூட்டநெரிசலில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குற்ற சம்பவங்களை தடுக்க கடைவீதிகளில் 40 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

மேலும் கீழ ராஜ வீதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் நேற்று மாலை திறந்து வைத்தார். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கணினியில் அவர் பார்வையிட்டார். அதன்பின் கீழ ராஜவீதியில் ஆய்வு மேற்கொண்டார். முக கவசம் அணியாதவர்களுக்கு முக கவசங்களை அவர் வழங்கினார்.

இரு சக்கர வாகனங்களை நிறுத்த வசதி

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ``புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதி உள்பட கடைவீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொதுமக்கள் கூட்ட நெரிசல், சந்தேகப்படும் நபர்கள் யாரேனும் சுற்றித்திரிகின்றனரா? என கண்காணிக்கப்படும். சங்கிலி பறிப்பு, பெண்களிடம் கிண்டல் உள்பட குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் உதவி மற்றும் புகார்கள் தொடர்பாக புறக்காவல் நிலையத்தை அணுகலாம். சுழற்சி முறையில் 3 பேர் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். 

கீழ ராஜ வீதியில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் பண்டிகை வரை அனுமதிக்கப்பட மாட்டாது. இரு சக்கர வாகனங்களை கடைவீதிகளின் அருகே தனியாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. அந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்கள் எவ்வித பயமும் இல்லாமல் கடைவீதிக்கு வந்து செல்லலாம். பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையான முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

போலீசார்

இந்நிகழ்ச்சியில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ், இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் (டவுன்), முகமது ஜாபர் (கணேஷ்நகர்) உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments