கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.நடுக்கடலில் கவிழ்ந்த படகை சக மீனவர்கள் கரைக்கு இழுத்த வந்த காட்சி.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. புயல் சின்னம், தொடர் மழையால் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கோட்டைப்பட்டினம் திடீர் நகர் பகுதியை சேர்ந்த மணிமுத்து (வயது 45), கணேசன் ஆகிய இருவரும் அனுமதி பெறாமல் பதிவு செய்யப்படாத நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சுமார் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் காற்றின் வேகம் திடீரென்று அதிகரித்தது. இதில் நாட்டுப்படகு அலைக்கழிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தலைகுப்புற படகு கவிழ்ந்தது. அதிலிருந்து தவறி விழுந்த மீனவர்கள் இருவரும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

இதைப்பார்த்த அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்கள் விரைந்து வந்து கணேசனை பத்திரமாக மீட்டனர். ஆனால் மணிமுத்துவை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து பல மணி நேரமாக அந்த பகுதி முழுவதும் தேடியும் எந்த தகவலும் இல்லை.

இதையடுத்து மீட்கப்பட்ட மீனவருடன் கரை திரும்பியவர்கள், இதுபற்றி மற்ற மீனவர்களுக்கும், கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்று காலை 6 மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் கடலுக்கு சென்று மாயமான மீனவர் மணிமுத்துவை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments