மணமேல்குடி அருகே படகை கரையோரம் நிறுத்துவதில் தகராறு; சமாதானப்படுத்த முயன்றவர் அடித்துக் கொலை கார் எரிப்பு-2 பேர் கைது
மணமேல்குடி அருகே படகை கரையோரம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சமாதானப்படுத்த முயன்றவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

படகை நிறுத்துவதில் தகராறு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா. இவருக்கு சொந்தமான நாட்டுப்படகை கரையோரம் நிறுத்துவதில் அம்மாபட்டினம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த முகமது சாலிகு(வயது 48) என்பவருக்கும், இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில், பாதுஷா வீட்டிற்கு சென்ற முகமது சாலிகு மற்றும் அவரது கூட்டாளிகள் மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பாதுஷாவின் மாமனார் காதர் சாகிப் (48) சமாதானப்படுத்த முயன்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அடித்துக் கொலை

ஆனால், பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததால் கைகலப்பாக மாறியது. அப்போது காதர் சாகிப் கைகளாலும், சுத்தியலாலும் தாக்கப்பட்டார். இதில், படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது சாலிகு, வகாபு, சமீர்கான் ஆகியோரை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கார் எரிப்பு

காதர் சாகிப் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் முகமது சாலிகு வீட்டிற்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை தீ வைத்து எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments