குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 28-ந் தேதி ஏலம்
புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் மது தொடர்பான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் வருகிற 28-ந் தேதி காலை 8 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்ட குழு முன்னிலையில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் இருசக்கர வாகனம் எடுக்க ரூ.2 ஆயிரமும், மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம் என முன்பணமாக செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 26-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம். ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் ஏல முன் பணத்தொகையை 27-ந் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள தற்காலிக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்க பிரிவு) அலுவலகத்தில் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments