அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி ரத்த அழுத்தத்தை பரிசோதித்தால் பிரசவத்தில் இறப்பை தடுக்கலாம்: அரசு மருத்துவரின் ஆய்வு முடிவில் தகவல்

 கர்ப்பிணிகளுக்கு அங்கன்வாடி மையங்களில் அடிக்கடி ரத்த அழுத்தத்தை பரிசோதித்தால் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழப்பைத் தடுக்கலாம் என அரசு மருத்துவர் மேற்கொண்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

கர்ப்பக் காலத்தில் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பிரசவத்தின்போது அதிக எண்ணிக்கையில் தாய்,சேய் உயிரிழப்பதை ஒட்டி கடந்த 2016 -17-ல் ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்) ஒப்புதலுடன் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரத்தில் சமூக மற்றும் நோய்த்தடுப்பு அரசு மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த ஆராய்ச்சி குறித்த கட்டுரையானது சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி இதழில் (BMC proceedings) 2 தினங்களுக்கு முன் வெளியானது. அதில், கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்த பரிசோதனை அடிக்கடி செய்யப்பட்டு, உரிய சிகிச்சை கிடைத்தால் உயிரிழப்பு தடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: உலக அளவில் பிரசவத்தின்போது 14 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் உயிரிழக்கின்றனர். இது, தமிழகத்தில் 29 சதவீதமாக உள்ளது.

அதிலும், தமிழகத்தில் 78 சதவீதம் பேர் மட்டுமே முறையாக ரத்த அழுத்த பரிசோதனையை செய்துகொள்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை வட்டாரத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு, 135 அங்கன்வாடி மையத்திலும் டிஜிட்டல் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் மூலம் பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களால் 739 கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்த பரிசோதனை குறுகிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவில் 735 பேர் தொடர்ந்து முறையாக ரத்த அழுத்த பரிசோதனை செய்துகொண்டனர். இவர்களில் உரிய சிகிச்சை தேவைப்படுவோரின் விவரங்கள் அந்தந்த பகுதி மருத்துவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தேவையான சிகிச்சையும், உணவில் மாற்றம் போன்ற ஆலோசனையும் கிடைத்ததால் தாய், சேய் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

எனவே, கர்ப்பிணிகளுக்கு முறையாக, குறுகிய கால இடைவெளியில், அடிக்கடி ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்வது ஆரம்ப நிலையிலேயே கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிய தீர்வாக அமைகிறது.

ஆனால், 8 கிலோ மீட்டருக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், 3 கிலோ மீட்டருக்கு ஒரு துணை சுகாதார நிலையமும் இருப்பதால் அங்கு சென்று கர்ப்பிணிகள் பரிசோதனை செய்துகொள்வதில் தேக்கம் ஏற்படுகிறது. அதேநேரம், ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு அங்கன்வாடி மையம் இருப்பதாலும், அதன் பணியாளர்கள் அருகிலேயே இருப்பதாலும் பரிசோதனை செய்வது எளிதாக இருந்தது. எனவே, அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி ரத்த அழுத்தத்தை பரிசோதித்தால் தாய், சேய் உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments