சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற புதுக்கோட்டை வாலிபருக்கு தூக்கு உறுதி மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது





 
சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமியை கொன்றவருக்கு தூக்கு

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற 7 வயது சிறுமி மாயம் ஆனார். பின்னர் பல்வேறு இடங்களில் தேடியதில், அதே பகுதியில் முட்புதரில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த பூ வியாபாரி சாமுவேல் என்ற ராஜாவை(வயது 25) கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

முடிவில், சாமுவேல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் கொலை, குழந்தைகள் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஐகோர்ட்டில் மனு

இந்த தண்டனையை நிறைவேற்றுவது குறித்து முடிவு செய்வதற்காக ஏம்பல் போலீஸ் இன்ஸ்பெக்டர், இந்த தீர்ப்பின் விவரங்கள் அடங்கிய மனுவை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இதேபோல தனக்கு விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சாமுவேல் தரப்பில் மேல்முறையீட்டு மனு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தபின், கொடூரமாக அந்த சிறுமியை கொலை செய்துள்ளார். அவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள், தடயங்கள், சாட்சியங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் மனுதாரருக்கு கீழ்கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. எனவே சிறுமியை கொடூரமாக கொன்றவருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

சாட்சிகளின்படி தண்டனை

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சிறுமியை மனுதாரர் ஆசைவார்த்தை கூறி சம்பவத்தன்று பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதை பலர் பார்த்துள்ளனர். பின்னர் அந்த சிறுமி, குளத்தின் அருகில் படுகாயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சூழ்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மனுதாரர் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், சாட்சிகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டு, கீழ்கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் கொலைக்குற்றம் ஆகியவற்றின் கீழ் மனுதாரருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அறிவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும் என்கிறார், திருவள்ளுவர்.

அதாவது, கொலை செய்யாமல் இருப்பது தான் அறச்செயல். கொலைக்குற்றத்தில் ஈடுபடுவது அனைத்து பாவங்களையும் செய்ததற்கு சமம் என்பது இதன் பொருள்.

மேலும் அவர்,எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும்என்றும் சொல்லியிருக்கிறார்.அதாவது, நீதி தேடி வருபவர்களிடம் எளியவனாய் இருந்து, ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன் பாவத்தையும், பழியையும் தானே தேடி அழிவான் என்பது பொருளாகும். எந்த மதமும் கொலை செய்வதை ஊக்குவிப்பதில்லை.

தூக்கு உறுதி

எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகள் மற்றும் பல்வேறு ஆவணங்களையும், வாக்குமூலங்கள் உள்ளிட்டவைகளையும் ஆராய்ந்து, மனுதாரருக்கு விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்கிறோம். மனுதாரர் தனக்கு விதித்த தண்டனையை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments