திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் 9½ லிட்டர் இருமல் மருந்தை கடத்த முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு





திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் 9½ லிட்டர் இருமல் மருந்தை கடத்த முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இருமல் மருந்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சோலையப்பன் (வயது 58). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருச்சியில் இருந்து விமானத்தில் மலேசியா செல்ல இருந்தார். விமான நிலையத்தில் அவரது உடைமைகளை இமிகிரேசன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது இருமல் மருந்து பாட்டில் அளவுக்கு அதிகமாக வைத்திருந்தது தெரியவந்தது. இதற்கிடையில் மதுரை மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததில் விரைந்து வந்து சோலையப்பனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த இருமல் மருந்து பாட்டில்கள் 95 எண்ணிக்கையில் மொத்தம் 9½ லிட்டர் அளவு இருந்தது.

அதனை விமானத்தில் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. பொதுவாக இருமல் மருந்தில் சிறிதளவு போதை மருந்தும் கலந்து இருக்கும். அதனை குறிப்பிட்ட அளவு மட்டுமே தனிநபர் பயன்படுத்த வேண்டும். அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் போதையாகிவிடும். சோலையப்பன் கொண்டு செல்ல முயன்ற இருமல் மருந்திற்கு டாக்டர் பரிந்துரை கடிதமோ? உள்பட எந்தவொரு ஆவணமும் இல்லை. அவர் அதனை மலேசியாவுக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

இதைத்தொடர்ந்து சோலையப்பனை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் இருமல் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அந்த மருந்து பாட்டில்களை மலேசியாவில் ஒருவரிடம் கொடுப்பதற்காக குருவி போல அவர் செயல்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சோலையப்பனுக்கு 2 பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சோலையப்பனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments