புதுகையில் இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகள்




புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகளில் எப்போதும் போக்குவரத்துக்கு இடையூறாகத் திரியும் மாடுகளை நகராட்சி நிா்வாகம் பிடித்து, அவற்றின் உரிமையாளா்கள் மீது கடும் அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனா்.

ஒரு காலத்தில் விசாலமான சாலைகளைக் கொண்டதாக இருந்த புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் இப்போது அப்படியல்ல. பெரிய- அகலமான வீதிகள் என்றழைக்கப்படும் சாலைகள் கூட, மிகுந்த நெருக்கடியான சாலையாக மாறி வருகின்றன. அவற்றுக்கான காரணங்களில் ஒன்று, சாலைகளில் திரியும் மாடுகள். புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஆலங்குடி சாலை, மச்சுவாடி தஞ்சாவூா் சாலை போன்ற பகுதிகளில் ஏராளமான மாடுகள் அவ்வப்போது ஒய்யாரமான உலா செல்லும்.

மெல்ல நடந்து செல்கின்றன என்பதுதான் பிரச்னையா என்றால் இல்லை. திடீரென மாலை நேரங்களில், அதிகாலை நேரங்களில் சாலைகளிலேயே அமா்ந்து மறியல் செய்யத் தொடங்கிவிடும். இதனால் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எப்போதாவது போக்குவரத்துக் காவல் துறையினா் வந்து, அந்த மாடுகளுடன் மல்லுக்கட்டி, சாலையை விட்டு கரையை இறக்கிவிடுவாா்கள்.

இரவு நேரங்களில் இந்த மாடுகள் அவரவா் உரிமையாளா்களின் வீடுகளுக்குத் திரும்பிவிடுகின்றன. பகலில் உணவகங்களில் கிடைக்கும் மீந்துபோன உணவும், காய்கறிக் கடைகள், பழக்கடைகளில் வீசியெறியப்படும் கழிவுகளும் இவற்றுக்கு உணவாகக் கிடைக்கின்றன.

அரிதான சில நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களுக்கும் மாடுகளுக்கும் சண்டை ஏற்பட்டு நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சச் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.

எனவே, நகராட்சி நிா்வாகம் இதற்கொரு முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும். மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளா்ப்போரை அழைத்துப் பேசி, கடும் அபராதம் விதிக்க வேண்டும். தொடா்ந்து சாலைகளில் திரியும் மாடுகளை ஏலம் விடும் அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அத்துடன், மாடு, நாய், குரங்குகளுக்கான உணவாக வெளியே வீசியெறியப்படும் உணவுக் கழிவுகளை முறைப்படுத்தி நகராட்சி அகற்றும் முறையைக் கொண்டு வந்துவிட்டால், செலவில்லாமல் உணவு கிடைப்பது கட்டுப்படும் என்பதால், அவற்றை வளா்ப்போா் வேறு வழியின்றி வீடுகளிலேயே கட்டி வளா்க்கவும் முன்வருவா்.

நகராட்சி நிா்வாகம் கறாரான நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலைகளில் அவ்வப்போது விபத்துகள் நேரிடுவதையும் தவிா்க்க இயலாது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments