இதமான தட்ப வெப்பநிலை: கோடியக்கரை சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்



கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் தங்கிச் செல்வதற்கான சூழ்நிலை நிலவுவதால் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை ஆறு லட்சத்தை தண்டியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான சீசன் காலங்களில் லட்சக்கணக்கில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. ராம்சார் சைட் எனப்படும் இந்த பறவைகள் சரணாலயத்தில் ரஷ்யா-ஆர்ட்டிக் கிழக்கு ஐரோப்பா, மேற்காசிய நாடுகள், சீனா, ஈரான் ஈராக், இலங்கை, பாகிஸ்தான், போன்ற பகுதிகளிலிருந்து நான்காயிரம் முதல் எட்டாயிரம் மைல்கள் வரை பறந்து வரும் பறவைகள் இங்கு இளைப்பாரிச் செல்கின்றன.


இந்த நிலையில் இந்த ஆண்டு வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. மழையின் காரணமாக சரணாலயத்தில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் நீர் நிறைந்துள்ளதால் வெளிநாட்டு பறவைகள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளன. ரஷ்யாவிலிருந்து மூக்கு உள்ளான், கொசு உள்ளான், சிவப்புகால் உள்ளான் போன்ற உள்ளான் இன பறவைகள்; மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் வரை கோடியக்கரைக்கு வந்துள்ளன.

கோடியக்கரை சரணாலயத்தில் பூனாரை பறவைகள் இருபதாயிரம் எண்ணிக்கையிலும் வாத்து இனங்கள் ஐம்பதாயிரம் எண்ணிக்கையிலும் செங்கால்நாரை, கூழைக்கிடா, கடல்காகம், கடல்ஆலா போன்ற பறவைகள் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையிலும் வெளிநாட்டு பறவைகள் கோடியக்கரை சரணாலயத்திற்கு வந்துள்ளன. கோவைத்தீவு, இரட்டைத்தீவு, சிறுதலைக்காடு, போன்ற இடங்களில் உள்ள கடற்பரப்பிலும், சதுப்பு நிலப்பகுதியிலும் கூட்டம் கூட்டமாக பறவைகள் சதுப்பு நிலங்களில் கிடைக்கும் உணவிற்காக வருகின்றன.
 
கடந்த ஐந்தாண்டுகளில் தற்போது வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஆண்டு கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆறு லட்சம் முதல் ஏழு வரை வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதாக பறவை ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் தொடர்ந்து மழை பெய்து சதுப்பு நிலப்பகுதியில் மழைநீர் நிறைந்து இருந்ததால் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி தங்கள் இனத்தை விருத்தி செய்து தாயகம் திரும்பியது. இந்த ஆண்டும் மழை பெய்துள்ளதால் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு சரணாலயத்திற்கு வரும் பறவைகள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments