`காவலன் செயலி' குறித்து மாணவ-மாணவிகளிடம் எடுத்துக்கூற வேண்டும் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவுறுத்தல்


புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட பள்ளி மேலாண்மைக்குழு கருத்தாளர்களுக்கான 2 நாள் உண்டு உறைவிட பயிற்சியின் நிறைவு விழா புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு லில்லி கிரேஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

போலீசார் குறித்து நல்ல எண்ணங்களை மாணவர்களிடம் ஆசிரியர்கள் விதைக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை உணரும் பொழுது `காவலன் செயலி'யை அழுத்தினால் அடுத்த சில நிமிடங்களிலேயே போலீஸ் ரோந்து வாகனம் அங்கு வந்து நிற்கும். இதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் எடுத்துக்கூற வேண்டும். அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். சட்டங்கள் பற்றி ஆசிரியர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சட்டங்களை தவறாக பயன்படுத்தக்கூடாது. சைபர் கிரைம் குற்றங்களுக்கு 155260 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன் ஆகியோர் பேசினர். பயிற்சியின் கருத்தாளர்களாக ராஜ்குமார், முனைவர் மாரியப்பன், சதாசிவம், கருப்பையன் உள்பட பலர் செயல்பட்டனர். இந்த பயிற்சியில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 74 ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 194 பேர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments