இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும்-மத்திய அரசுக்கு நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை







இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.

ராமநாதபுரம் கே.நவாஸ்கனி எம்.பி வெளியிட்டுல்ல அறிக்கையில் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல். நிறுவனம்

பெண்களுக்கான உஜ்வாலா கியாஸ் சிலிண்டர் திட்டத்தின் வெற்றியை ஜனாதிபதி உரை எடுத்துரைக்கிறது. ஆனால் கியாஸ் சிலிண்டர் அடுப்பை கையில் கொடுத்துவிட்டு கியாஸ் சிலிண்டரின் விலையை  உயர்த்திய சாதனையை எங்கு சென்று குறிப்பிடுவது. 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கின்றது என்பது பெருமைக்குரிய விஷயம் தான். 
ஆனால் நம்முடைய அரசின் கைகளில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4ஜி தொழில் நுட்பத்திற்கு அனுமதி வேண்டி ஆண்டுகள் தாண்டி மன்றாடிக் கொண்டிருக்கின்றது. அதை எப்போது இந்த அரசு கவனத்தில் கொள்ளப் போகிறது. 

உணர்வுகளை புண்படுத்தி விட்டார்

 தமிழ்நாட்டின் அதிகார மையமான சட்டசபையில் நீட் தேர்வை எதிர்த்து ஒருமித்த ஆதரவோடு தீர்மானத்தை நிறைவேற்றி மாநில கவர்னரின் பார்வைக்கு அனுப்பினோம். அந்த தீர்மானத்தை மாநில கவர்னர் இவ்வளவு காலம் கிடப்பில் போட்டுவிட்டு நிராகரித்து திருப்பி அனுப்பிவிட்டார். தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் திரும்ப அனுப்பி 8 கோடி தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டார். தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த நீட்டில் இருந்து விலக்கு கேட்டு மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றார்கள். 

படகுகளையும் விடுவிக்க வேண்டும்

ராமநாதபுரம் மீனவர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதி. தொடர்ந்து எங்களுடைய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றனர். இது சம்பந்தமாக நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு நிதி உதவியை அள்ளிக் கொடுக்கும் அரசு, இலங்கை அரசையும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வலியுறுத்த வேண்டும். இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்த போது கொடுத்த அழுத்தத்தை, எங்களுடைய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த போது கொடுக்க ஏன் மத்திய அரசு தயங்குகிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் படகுகளோடு மீட்கப்பட்டார்கள். இப்போது மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டு வந்தாலும், படகுகள் இல்லாமல் அவர்கள் எதை வைத்து தொழில் செய்வார்கள். படகுகளோடு அவர்கள் மீட்கப்பட வேண்டும். படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசு அறிவித்திருக்கிறார்கள். அந்த படகுகளை எல்லாம் மத்திய அரசு வலியுறுத்தி மீட்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் நாட்டு படகுகளுக்கு 1½ லட்சம் ரூபாயும், விசைப்படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும் அறிவித்திருக்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments