உலக மகளிர் தினத்தையொட்டி3½ லட்சம் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு




புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உரிமைகள், நலன்கள், பாதுகாப்பு, சட்ட உதவி, மனநலம், பாலியல் நலக்கல்வி, உடல் நலம், பாலின சமத்துவம், கற்றல் தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகத்தால் அரண் எனும் இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு, சட்ட உதவி மற்றும் அரண் இயக்கத்தின் கொள்கை தொடர்பான உறுதிமொழி ஏற்பு மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நேற்று ஒரே நேரத்தில் நடைபெற்றது.

1,967 பள்ளிகள்
புதுக்கோட்டையில் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கவிதாராமு தலைமையில் மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். அதன்பின் அவர் கூறுகையில், ‘‘உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதனை நிகழ்வாக 1,967 பள்ளிகள் மற்றும் 21 கல்லூரிகளை சேர்ந்த 3 லட்சத்து 42 ஆயிரத்து 340 மாணவ, மாணவிகள் அரண் என்ற உறுதிமொழியினை எடுத்தனர். 
மாணவ, மாணவிகள் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தாலோ, யாருக்கேனும் நிகழ்வதை தெரிந்து கொண்டாலோ மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு கட்டணமில்லா அவசரகால உதவி எண் 1800 425 2411 மற்றும் வாட்ஸ்-அப் உதவி எண் 94433 14417 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். மேலும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கூற வேண்டும். உலக மகளிர் தினத்தையொட்டி, பாலின பாகுபாடு இல்லாமல் அனைவரும் பாலின சமத்துவத்தை பின்பற்றி வாழ வேண்டும்’’ என்றார்.
அதிகாரிகள்
நிகழ்ச்சியில் பிளஸ்-2 மாணவி ஹேமவர்ஷினி தனது கைப்பட வரைந்த பென்சில் ஓவியத்தினை கலெக்டருக்கு வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன், மாவட்ட மனநல திட்ட அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அனிதா, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய தலைவர் சுதா அடைக்கலமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தனலட்சுமி அழகப்பன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய ஆணையர் சதாசிவம், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் மற்றும் அரண் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். வரலாற்று ஆசிரியர் மதியழகன் அரண்உறுதி மொழியை வாசிக்க அனைத்து மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
இந்த உறுதி மொழி மூலம் மாணவர்களது உரிமை மற்றும் பொறுப்புகள், பாலியல் வன்கொடுமை தொடர்பான உதவி எண் 1098, மகளிர் உதவி மைய எண் 181 உள்ளிட்ட விவரங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. முன்னதாக பள்ளியில் பணிபுரியும் மகளிருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.
கீரமங்கலம்
கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரண் அமைப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றனர். மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
திருவரங்குளம்
திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு கட்டுரை, ஓவியப்போட்டி நடைபெற்றது. இதைதொடர்ந்து மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments