அறந்தாங்கியில் படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்கள் 4 பேர் பள்ளியில் சேர்ப்பு




அறந்தாங்கி வட்டார வள மையத்திற்குட்பட்ட அண்ணாநகர் 3-வது வார்டில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கள ஆய்வானது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வில் கொரோனா தொற்று காரணமாக பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்தும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தொழில் நிமித்தமாக கேரள மாநிலத்திலிருந்து அறந்தாங்கி அண்ணாநகரில் குடியேறியுள்ள மாலா என்பவரின் குழந்தைகள் மணிகண்டன், கிருஷ்ணபிரியா மற்றும் மணமேல்குடியிலிருந்து குடியேறியுள்ள மாணவன் தியாகராஜன் ஆகியோர் பள்ளி செல்லாமல் இடை நின்று இருப்பது கள ஆய்வில் தெரியவந்தது.

 பின்னர் அவர்களின் பெற்றோர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மணிகண்டன் (7 -ம் வகுப்பு), கிருஷ்ணபிரியா (5-ம் வகுப்பு) தியாகராஜன் (7-ம் வகுப்பு) ஆகியோரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அருகில் உள்ள அறந்தாங்கி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் மாணவர்கள் 3 பேருக்கும் தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகம்,  சீருடை, புத்தகப்பை வழங்கப்பட்டது.  இதேபோல் காந்திநகர் பகுதியில் பள்ளி செல்லாமல் இருந்த ரோஷன் என்ற மாணவனை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்க்க உத்தரவிட்டார். இந்த கள ஆய்வில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், பள்ளி செல்லா குழந்தைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments