குரூப் -2 தேர்வுக்கு தயாராவது எப்படி, என்னென்ன புத்தகங்களை படிக்கலாம்?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 23-ம் தேதி முதல் ஆர்வமுள்ள பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர். வரும் மார்ச் 23-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் தேர்வு இதுவாகும். இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, துணைப் பதிவாளர், வருவாய் உதவியாளர், உதவியாளர், அலுவலக உதவி அதிகாரி உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு பட்டதாரிகளை தேர்வு செய்ய இத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 5529 பணியிடங்கள் உள்ளன.

நேர்முகத்தேர்வுடன் கூடிய பணியிடங்கள், நேர்முகத்தேர்வு இல்லாத பணியிடங்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல்நிலை தேர்வு (Preliminary), முக்கிய தேர்வு (Main), நேர்முகத்தேர்வு (Interview) என மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வு வரும் மே 21-ம் தேதி நடக்கிறது. இதன் முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முக்கிய தேர்வு எழுத முடியும். முக்கிய தேர்வு செப்டம்பரில் நடைபெறும். இதன் முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கு தயாராகும் முறை

தேர்வுக்கு தயாராவதற்கு முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை கவனிக்க வேண்டும். பாடத்திட்டத்தின் முழுவிவரங்களை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நாட்டுநடப்பு குறித்த அடிப்படை அறிவு, பொது அறிவு, மொழி அறிவு, திறனறிதல் ஆகியவையே தேர்வுக்கான அடிப்படை. அறிவியல் மற்றும் சமூக அறிவியலின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் பாட நூல்களை படிக்கலாம். தீவிரமாக தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமென்றால் தேர்வு பாடத்திட்டத்தை முழுமையாக அலச வேண்டும். அதற்கு ஆழமான அறிவுடன் எழுதப்பட்ட புத்தகங்களை விரிவாக படிக்க வேண்டும்.

மதிப்பெண்கள்

முதல்நிலை தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். முக்கிய தேர்வில் 750 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். நேர்முகத்தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. பொது அறிவைப் பொறுத்தமட்டில், தமிழகத்தின் வரலாறு, பூகோளம் மற்றும் மாநிலம் தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கேள்விகள் இடம்பெறும். இதற்கு மனோகர் பாண்டே எழுதி அரிஹந்த் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள அரிஹந்த் ஜிகே புத்தகம், பஷீர் அகமது, சாம்பசிவம் எழுதி சக்தி பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள குரூப்-2ஏ புத்தகம், கார்த்திகேயன் எழுதி டாடா மெக்ராஹில் வெளியிட்டுள்ள புத்தகம் ஆகியவை பயனுள்ளதாக இருக்கும்.

திறனறிதல் பாடத்திற்கு சுப்புராஜ் எழுதி சுரா பதிப்பகம் வெளியிட்டுள்ள குரூப்-2 ஆப்டிடியூட் புத்தகம், சாக் ஷி பதிப்பகம் வெளியிட்டுள்ள மென்டல் எபிலிடி டெஸ்ட் புத்தகம், அரிஹந்த் பதிப்பகத்தின் பி.எஸ்.சிஜ்வாலி, எஸ்.சிஜ்வாலி எழுதிய ‘எ நியூ அப்ரோச் டு ரீசனிங்’ ஆகிய புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு சக்தி பதிப்பகத்தின் டிஎன்பிஎஸ்சி சுப்ரீம் கைடு மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாட நூல்கள் பயனுள்ளவை.

பொது ஆங்கில அறிவுக்கு எஸ்.ஓ.பக் ஷி எழுதி அரிஹந்த் பதிப்பகம் வெளியிட்டுள்ள அப்ஜெக்டிவ் ஜெனரல் இங்கிலீஷ் ஆகியவை பயனுள்ளவையாக இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு பெக்கி மெக்கியின் கரியர் கான்பிடென்ஷியல், ரிச்சர்டு பிளாசவிக்கின் ‘அமேசிங் இன்டர்வியூ ஆன்சர்ஸ்’ மற்றும் ஜிகேபி பப்ளிஷர்சின் இன்டர்வியூ அண்டு ஜிடி போன்ற புத்தகங்கள் உதவிகரமாக அமையும். இதுதவிர முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள்களை படிப்பது அவசியம். பல இணையதளங்கள் குரூப்-2 தேர்வுக்கான தொடர் பயிற்சித் தேர்வுகளையும் நடத்துகின்றன. அதில் பங்கேற்று பயிற்சி எடுப்பதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முழு கவனத்துடன் கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்!

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments