புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 278 மனுக்கள் பெறப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கவிதாராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுக்க பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.
இதனால் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது கோடை காலமாக இருப்பதால் மனுக்கள் கொடுக்கும் இடத்தின் அருகே சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 278 மனுக்கள் கூட்டத்தில் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டர்

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் ரூ.78 ஆயிரத்து 700 மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை ஒரு பயனாளிக்கு கலெக்டர் கவிதாராமு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம், பொறுப்பு) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாணவிகளுக்கு பாராட்டு

இதேபோல கலெக்டர் அலுவலகத்தில் மற்றொரு நிகழ்வில் உலக சிக்கன நாளினை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி- வினா போட்டி மற்றும் சொற்றொடர் அமைத்தல் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 34 நபர்களுக்கு பரிசுகளை கலெக்டர் கவிதாராமு வழங்கி பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பணியின் போது கொரோனா தொற்றினால் உயிரிழந்த பணியாளர் மற்றும் பாம்பு கடித்து இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளை கலெக்டர் கவிதாராமு வழங்கினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments