அன்னவாசல் அருகே அரசு பள்ளியில் நடந்த மாணவர் தேர்தல்...



அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை அருகே மரிங்கிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் தனி சிறப்புகளில் ஒன்று ஆண்டுதோறும் மாணவர் அமைப்புக்கு தேர்தல் நடத்துவது தான். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர் தேர்தல் நடத்தப்படவில்லை. 
தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மாணவர் அமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. முன்னதாக தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் சக மாணவர்களிடையே ஆதரவு திரட்டினர்.

வாக்களித்தனர்
இந்த மாணவர் தேர்தலில் மொத்தம் 4 முதன்மை அமைச்சர் பொறுப்புகளும், 7 இணை அமைச்சர் பொறுப்புகளுக்கும் என மொத்தம் 11 மாணவர்கள் களத்தில் நின்றனர். நேற்று மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதற்காக அவர்களின் பெயர்கள் கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது. யாருக்கு எந்த பதவி வழங்குவது என்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில் மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்களிக்கும்போது வாக்களிக்கும் மாணவர் மற்றும் ஆசிரியரைத் தவிர வேறு யாரும் இல்லாமல் ரகசியமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

பின்னர் மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் வரவழக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் அதிக வாக்குகள் பெற்றவர்களுக்கு ஏற்ப பொறுப்புகள் வழங்கப்பட்டன. உள்துறை அமைச்சராக கவிபாண்டியன், வெளித்துறை அமைச்சராக கமலேஷ், மதிய உணவுத்துறை அமைச்சராக கார்த்திக், வரவேற்புத்துறை அமைச்சராக மனிஷா, புலனாய்வுத்துறை அமைச்சராக கங்காதரன், இணை அமைச்சர்களாக தருண், சுருதி, பிரசன்னதேவி, ரோகினி, சிவபிரசாத், கோகுலபிரியா, கிருஷ்ணவேணி, நிஷாந்த், பிரகாஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழியுடன் பதவி ஏற்றுக் கொண்டனர்.

பரிசு
தேர்தலில் வென்ற அனைவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியை நாகலெட்சுமி பரிசு வழங்கி பாராட்டினார். இந்த தேர்தலில் வெற்றிபெற்ற மாணவி மனிஷா கூறும்போது, தேர்தல் தேதியை அறிவித்ததில் இருந்து தேர்தல் எப்போது வரும் என்று காத்திருந்தேன். மாணவர்களிடம் எனக்கு வாக்களிக்க ஆதரவு திரட்டினேன். என்னால், என் பள்ளிக்கு பெருமை கிடைக்கும்படி நடந்து கொள்வேன் என்றார்.

இதுபற்றி ஆசிரியர் திருப்பதி கூறும்போது, நான் பணியேற்ற காலத்தில் இருந்து மாணவர் தேர்தலை நடத்தி வருகிறேன். மாணவர்களிடம் இளம் வயதிலேயே அரசியல் அறிவை கொண்டு செல்வது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும். அந்தவகையில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments