முகநூலில் வெளியான பதிவை பார்த்து பெண் மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி மாவட்ட கலெக்டர் வீடு தேடிச்சென்று வழங்கினார்...
முகநூலில் வெளியான பதிவை பார்த்து பெண் மாற்றுத்தினாளிக்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வீடு தேடிச்சென்று வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள துகிலி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய சகோதரி சந்திரலேகா. இருவரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களின் பெற்றோர் இறந்து விட்டனர். பிரகாசுக்கு திருமணம் ஆகி அவருடைய மனைவி கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.பிரகாஷ் மனைவிதான் தனது கணவரையும், அவரது சகோதரியையும் ம் கவனித்து வருகிறார். மாற்றுத்திறனாளிகளான இருவருக்கும் எந்தவித அரசு உதவியும் கிடைக்கவில்லை. 

முகநூலில் கலெக்டருக்கு வேண்டுகோள்
இந்த நிலையில் சந்திரலேகாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த அய்யப்பன் என்பவர் முகநூலில், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.
அதில் சந்திரலேகாவிற்கு, மூன்று சக்கர சைக்கிள் வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து இருந்தும் வழங்கப்படவில்லை. எனவே கலெக்டர் உடனடியாக வழங்க வேண்டும் என அதில் கூறி இருந்தார். இது கலெக்டரின் பார்வைக்கு வந்தது.

வீடு தேடிச்சென்றார்
இந்த பதிவை பார்த்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று திருவிடைமருதூர் அருகே உள்ள துகிலி கிராமத்தில் உள்ள சந்திரலேகாவின் வீட்டிற்கு சென்று விசாரித்தார். 
அப்போது 80 சதவீதத்துக்கும் மேல் சந்திரலேகா மாற்றுத்திறனாளியாக இருப்பதும், அவருடைய சகோதரரும் மாற்றுத்திறனாளியாக இருப்பதும் தெரிய வந்தது.

மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி
இதையடுத்து உடனடியாக சந்திரலேகாவிற்கு மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலியை வழங்கினார். அதனை அவர் பெற்றுக்கொண்டதோடு, தனது வீடு தேடிவந்து உதவி செய்த கலெக்டருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
மேலும் சந்திரலேகாவின் பராமரிப்பு செலவிற்காக மாதம் ரூ.1,500-க்கான மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும், பிரகாசுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணையையும் வழங்க உத்தரவிட்டார். இந்த ஆணை அவர்களுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பாராட்டு
மாற்றுத்திறனாளியின் வீடு தேடிச்சென்று உதவி செய்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments