SP பட்டினம் அருகே சங்ககால ஊர்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு- அகழாய்வு செய்ய கோரிக்கை



 


ராமநாதபுரம் மாவட்டம் SP பட்டினம் அருகே உள்ள மருங்கூர் மற்றும் ஓரியூரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்த இரு ஊர்களின் தடயங்களை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டு பிடித்துள்ளது. இங்கு அகழாய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் SP பட்டினம் அருகே மருங்கூர் மற்றும் ஓரியூரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ராஜகுரு, வெற்றிவேல், சேர்மராஜ் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர். 

பின்னர் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-

மருங்கூர் மகாகணபதி ஆலயத்தின் மேற்கில் கண்மாய் அருகிலுள்ள திடலிலும், கண்மாய் உள்ளேயும் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பழமையான பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இங்கு கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், அறுத்த சங்குகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், அரைப்புக் கல், சீனநாட்டு போர்சலைன், செலடன் வகை பானை ஓடுகள், சுடுமண் உறைகிணறின் உடைந்த ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

மேலும் மருங்கூரின் கடற்கரைப் பகுதியான தீர்த்தாண்டதானம் சிவன் கோயிலின் 7 கல்வெட்டுகளில் 4 இங்கு தங்கி இருந்த வணிகக் குழுக்களையும், வணிகர்களையும் குறிப்பிடுகிறது.

இந்த ஊரில் அலையாத்திக் காடுகள் சூழ்ந்த பாம்பாற்றின் ஒரு உப்பங்கழியும் உள்ளது. மருங்கூரில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் தீர்த் தாண்டதானம் கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் சங்க காலம் முதல் கி.பி.15-ம் நூற்றாண்டு வரை வணிக மையமாக இருந்ததை அறியலாம். எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மருங்கூர் பட்டினம் இதுதான் என்பது உறுதியாகிறது.

அதேபோல் ஓரியூர் கோட்டை மகாலிங்க சுவாமி கோயில் மற்றும் சேதுபதி அரண்மனை உள்ள வட்டவடிவமான சுமார் 20 ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், சீனநாட்டு போர்சலைன், செலடன் வகை பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த கோவிலின் தெற்கில் ஆறடி உயரத்தில் ஒரு செங்கல் கட்டுமானம் உள்ளது. இதில் உள்ள ஒரு முழு செங்கலின் நீளம் 23 செ.மீ., அகலம் 14 செ.மீ., உயரம் 4 செ.மீ. ஆகும். இது இடைக்கால செங்கல் அளவில் உள்ளதால் பிற்காலப் பாண்டியர்களால் கி.பி.13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையின் எச்சமாக இருக்கலாம். இங்கு சங்ககாலத்தில் மண்கோட்டையும், பாண்டியர் காலத்தில் செங்கல் கோட்டையும், சேதுபதிகள் காலத்தில் அரண்மனையும் பயன் பாட்டில் இருந்த தடயங்கள் உள்ளன.

மேலும் இப்பகுதி தற்போதும் அதிக நெல்விளையும் இடமாகவும், செம்மண் நிலமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே ஓரியூர் கோட்டை மகாலிங்கசுவாமி கோயில் பகுதி தான் ஊணூர் என்பது உறுதியாகிறது. இந்த இரு ஊர்களிலும் அகழாய்வு செய்து அதன் சிறப்பை வெளிக்கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments