மாநிலத்தையே திரும்பி பார்க்க வைத்தது புதுச்சேரியில் ஒரு போலீஸ் கிராமம் ஒரே நேரத்தில் 7 பேர் தேர்வானார்கள்






போலீஸ் தேர்வு முடிவில் திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் தேர்வானார்கள். இதன் மூலம் புதுச்சேரியில் ஒரு போலீஸ் கிராமமாக இது விளங்குகிறது.

தனி முத்திரை

புதுச்சேரி மற்றும் தமிழக போலீஸ் துறையில் திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுமார் 100 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ், ஊர்க்காவல் படை வீரர், பெண் காவலர் என பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இடம் பிடித்து தனி முத்திரை பதித்துள்ளனர். 

புதுச்சேரி தீயணைப்பு துறையிலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். போலீஸ் பணிக்கான தேர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்று இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள். 

கூலி தொழிலாளர் குடும்பம்

புதுச்சேரி மாநில போலீஸ் துறை சார்பில் நடந்த காவலர் தேர்விலும் செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு எழுதினர். 
இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளதில் இந்த கிராமத்தை சேர்ந்த 7 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே புதுச்சேரி, தமிழக போலீஸ் துறையில் அதிகம் பேர் பணியாற்றி வரும் நிலையில் தற்போதும் இந்த அளவுக்கு தேர்ச்சி பெற்று இருப்பது மாநிலத்தையே போலீஸ் கிராமமாக செட்டிப்பட்டு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதிலும் தமிழ்ச்செல்வம் என்பவர் மாநில அளவில் 8-வது இடத்தை பிடித்து தேர்வாகி இருப்பது மற்றொரு சிறப்பாகும். இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 

வழிகாட்டும் முன்னோடிகள்

ஏற்கனவே இந்த கிராமத்தில் இருந்து போலீஸ் துறையில் பணியில் இருந்து வருபவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வழிகாட்டி வருவது இந்த சாதனைக்கு முக்கிய அம்சமாகும். தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் புதுச்சேரி காவலர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது செட்டிப்பட்டு கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments