சென்னை-புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றும் பணி நடக்கிறது: அமைச்சர் விளக்கம்


ராணிப்பேட்டை மாவட்டம் புதிய மாவட்டம் என்பதால் அங்கு சாலைப் பணிகள், பாலம் அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி, செயல்படுத்தி வருகிறோம்

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் ரவி, டி.ஆர்.பி.ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் உள்ள ஒருவழிச்சாலைகளை இருவழிச்சாலைகளாகவும், இருவழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் புதிய மாவட்டம் என்பதால் அங்கு சாலைப் பணிகள், பாலம் அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி, செயல்படுத்தி வருகிறோம்.

எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த ஆண்டே சாலை விரிவாக்கம், புதிய சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

நில எடுப்பு பணியால் சாலை, பாலப் பணிகள் தாமதமாவதைத் தவிர்க்க, நில எடுப்பை முறையாக முடித்த பிறகே, ஒப்பந்தப்புள்ளி கோரி பணிகளைத் தொடங்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

மன்னார்குடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணியும், நீடாமங்கலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அமைக்கும் பணி கைவிடப்பட்டதாக வெளியான செய்தி தவறானது. அதற்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டு ஒன்றிய அரசின் பங்களிப்புடன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments