மணமேல்குடி அருகே தொழில் அதிபரை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் துப்பு துலங்கியது




மணமேல்குடி அருகே தொழில் அதிபரை கொன்று நகை கொள்ளை போன வழக்கில் துப்பு துலங்கியது. கொலைக்கான காரணம் குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பு துலங்கியது

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஜாம் (வயது 52). தொழில் அதிபர். சம்பவத்தன்று இவரை மர்மநபர்கள் கொலை செய்து, அவரது வீட்டில் லாக்கரில் இருந்த 170 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வெவ்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிற நிலையில் துப்பு துலங்கி உள்ளது. இது தொடா்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கொலையான முகமது நிஜாமின் வீட்டின் அருகே அவரது தோட்டத்தில் கடந்த 3 மாதங்களாக ஒரு தம்பதி தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் தம்பதி போல வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

2 பேர் தலைமறைவு

கொலை சம்பவம் நடந்த பின் அவா்களை காணவில்லை. அவர்கள் 2 பேரும் தலைமறைவாக உள்ளார்கள். அவர்களுக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களை பற்றி இங்குள்ளவர்களுக்கு அதிகம் தெரியவில்லை. அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரையும் பார்ப்பதற்கு அவ்வப்போது சிலர் வந்து சென்றிருக்கின்றனர். இதனால் இந்த கொலை சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகத்தில் விசாரிக்கப்படுகிறது.

ஒரு ஜோடி செருப்பு

முகமது நிஜாமை கொலை செய்யும் நோக்கத்தோடு மட்டும் தான் இந்த சம்பவம் நடந்திருக்க வேண்டும். ஆனால் நகை, பணத்திற்காக நடந்ததை போல மாற்ற அவர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம். அதேநேரத்தில் முகமது நிஜாமை கொடூரமாக கொலை செய்தவர்கள், அவரது மனைவி ஆயிஷா பீவியிடம் கனிவாக நடந்துள்ளனர். கொலையானவரின் வீட்டின் பக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் இருந்து ஒரு ஜோடி செருப்பு கிடைத்துள்ளது. அது கொலையாளிகள் பயன்படுத்தியதா? என்பது தெரியவில்லை. இதனை கைப்பற்றி உள்ளோம்.

முகமது நிஜாமின் செல்போனில் பதிவாகி உள்ள எண்கள் மற்றும் அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தியதில் கொலையாளிகள் பற்றி விவரம் ஓரளவுக்கு கிடைத்துள்ளது. தொழில் அல்லது முன்விரோதம், சொத்து பிரச்சினை காரணமாக கொலை நடந்ததா என விசாரிக்கப்படுகிறது. ஓரிரு நாளில் இந்த வழக்கில் கொலையாளிகளை கைது செய்துவிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

3 பேரிடம் விசாரணை

இந்நிலையில் போலீசார் முகமது நிஜாமின் தோட்டத்தில் தங்கியிருந்த ஒரு பெண் உள்பட 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்தது நோன்பு காலம் என்பதால் மனைவி ஆயிஷா பீவியிடம் அடிக்கடி போலீசார் மீண்டும் விசாரணை நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments