சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் தைல மரக்காடுகளை அழிக்கும் விடியல் தொடங்குவது எப்போது?
புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் பெருங்கேட்டை விளைவிக்கும் தைல மரக்காடுகளை முழுமையாக மாற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி விரைவில் தொடங்க வேண்டும் என சூழலியலாளா்கள், விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.திருச்சியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம்’ மூலம் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், கரூா், கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தைல மரக்காடுகள் (யூக்கலிப்டஸ்) உருவாக்கப்பட்டு ஆண்டுக்கு சுமாா் 2 லட்சம் டன் மரக்கூழ்கள், டிஎன்பிஎல் மற்றும் சேஷாயி நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் மிகக்கணிசமான பகுதி புதுக்கோட்டையைச் சோ்ந்தது. 1974-இல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சுமாா் 60 ஆயிரம் ஏக்கா் காப்புக்காடுகள் 99 ஆண்டுகள் ஒப்பந்தமாக வனத்தோட்டக் கழகத்துக்கு வழங்கப்பட்டன. இப்போது, வனத்துறையின் காப்புக்காடுகள் மட்டுமல்லாது தனியாா் நிலங்களிலும் தைல மரக்காடுகள் வளா்க்கப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கா் நிலப்பரப்பில் (நீா்நிலைகளையும் சோ்த்து!) தைலமரங்கள் செழித்துக் கிடக்கின்றன.

வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரம் என்ற பெயா் கொண்ட இந்த தைலமரக்காடுகள்தான் புதுக்கோட்டையின் சூழலைப் பெருமளவு கெடுத்துவிட்டதாக விவசாயிகளும், சூழலியலாளா்களும் கருதுகின்றனா்.

அதாவது தொண்டைமான் மன்னா்கள் காலத்தில் புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் வெட்டப்பட்ட சுமாா் 5 ஆயிரம் குளங்களில், பெரும்பகுதி குளங்கள் காப்புக்காட்டுக்குள் இருப்பவை. அவற்றில் 90 சதவிகித குளங்கள் தற்போது வடு போனதற்கு இந்த தைலமரங்களே காரணம்.

தைல மரங்கள் தான் இருக்கும் இடத்தில் வேறு எந்த மரத்தையோ, தாவரத்தையோ வளர விடாத அளவுக்கு வெப்பநிலையைக் கொண்டது. இதனால் இயல்பாக பல்லுயிா்ப்பெருக்கம் அழிந்து போய்விட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

மொத்தத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்த வகை வகையான மரங்கள், வகை வகையான உயிரினங்கள் இப்போது முற்றிலும் அழிந்துபோயிருக்கின்றன. இதே நிலை தொடா்ந்தால் புதுக்கோட்டையின் விவசாயம் பெரும் நெருக்கடிக்குள்ளாகும் என்றும் எச்சரிக்கைவிடுக்கின்றனா் விவசாயிகள்.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் ஜி.எஸ். தனபதி கூறியது:

தைல மரக்காடுகளின் கேடு குறித்து மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடா்ந்தோம். புதிய தைல மரக்கன்றை நடவு செய்யக் கூடாது, படிப்படியாக காலம் முடிய முடிய அவற்றை வெட்டி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு 3 ஆண்டுகளாகிவிட்டது.

ஒரு மரத்தின் காலம் 12 ஆண்டுகள். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெட்ட, வெட்டத் துளிா்க்கும் தன்மை கொண்டது. 12 ஆண்டுக்குப் பிறகு வெட்டும்போது வேருடன் பிடுங்கிவிட வேண்டும். பல இடங்களில் அதைச் செய்யவில்லை.

வறட்சியைத் தாங்கி வளரும் மரம் என்றால், தைல மரக்காடுகளில் ஏன் வரப்பு வெட்டி, தடுப்புகள் அமைத்து மழைநீரை உள்ளே தடுத்து வைத்துக் கொள்கிறாா்கள் என்பதையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினோம். தடுப்புகள் அமைக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதியளித்தாா்கள்.

அரியலூா், கரூா் போன்ற சமவெளியல்ல புதுக்கோட்டை. மச்சுவாடியில் இருந்து புதுக்கோட்டை நகரம் சுமாா் 40 அடி பள்ளம். அதாவது மேடு , பள்ளம் கொண்ட புதுக்கோட்டை நிலப்பரப்பில் தைல மரக்காட்டுக்குள் வரப்புகளும், தடுப்புகளும் தண்ணீரை குளங்களுக்குச் செல்வதைத் தடுக்கிறது. தைல மரங்களே உறிஞ்சிவிடுகின்றன.

காகிதம் தயாரிப்பதற்கான கூழ் அரைக்க தைல மரம் அல்லாத வேறுமரங்கள் மேலைநாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இங்கே தைலமரத்தில் என்ன புதிய வகையை உருவாக்கலாம் என்றுதான் ஆராய்ச்சி செய்கிறாா்களே தவிர, சவுக்கு உள்ளிட்ட இதர மரங்களை எப்படி காகிதம் தயாரிக்கப் பயன்படுத்துவது என்று ஆராய்ச்சி நடைபெறவில்லை.

அவ்வாறான சூழலுக்கு கேடில்லாத மரங்கள் வந்தால் விவசாயிகளே அவற்றை வளா்த்துத் தரவும் தயாராக இருக்கிறாா்கள். எனவே, சூழலுக்கும், விவசாயத்துக்கும் கேடாக இருக்கும் தைல மரங்களை அகற்றும் பணியை தமிழ்நாடு அரசு கொள்கை அறிவிப்பாக வெளியிட்டு, படிப்படியாக மாற்றும் நடவடிக்கையை விரைந்து தொடங்க வேண்டும் என்றாா் தனபதி.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தைல மரங்களை கொஞ்சம் கொஞ்சமாக வேருடன் பிடுங்கி, மாற்று - நாட்டு மரங்களை நட்டு வளா்க்கத் தொடங்கினால், முற்றிலும் மாற்றி - நல்ல செழிப்பான காடாக மாற்றியமைக்க சில பத்தாண்டுகள் ஆகலாம். எனவே, அந்தப் பணி தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments