பொது இடங்களில் ஆதார் நகலைக் பகிர வேண்டாம்... மத்திய அரசு சொல்வதென்ன?






மக்களின் ஆதார் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்விதமாக, முக்கிய விவரங்கள் மறைக்கப்பட்ட ஆதார் கார்டு நகலைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியிருக்கிறது.

இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``உங்கள் ஆதார் கார்டின் புகைப்பட நகலை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இது ஒருவேளை தவறாகப் பயன்படுத்தப்படலாம். மாற்றாக, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே காண்பிக்கும் ஆதாரின் புதிய வெர்ஷனை பயன்படுத்தவும். இதனை, யு.ஐ.டி.ஏ.ஐ என்ற ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in பக்கத்தில், `முக்கிய விவரங்கள் மறைக்கப்பட்ட ஆதார் வேண்டுமா?' என்பதைத் தேர்வுசெய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் இன்டர்நெட் கஃபே-வில், தங்களின் இ-ஆதாரை பதிவிறக்கம் செய்ய பொது கணினிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். ஒருவேளை அப்படிச் செய்தால், அந்த கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட இ-ஆதார் குறித்த அனைத்து தகவல்களையும் நிரந்தரமாக நீக்குவதை உறுதிசெய்யவும்.

யு.ஐ.டி.ஏ.ஐ-லிருந்து பயனர் உரிமத்தைப் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே தகவலுக்காக ஒரு நபரின் ஆதாரைப் பயன்படுத்த முடியும். ஹோட்டல்கள் அல்லது தியேட்டர்கள் உள்ளிட்ட உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டையின் நகல்களை சேகரிக்கவோ, வைத்திருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு செய்தால் அது ஆதார் சட்டம் 2016-ன் கீழ் குற்றமாகும். ஒரு தனியார் நிறுவனம் உங்கள் ஆதார் கார்டை பார்க்க விரும்பினாலோ அல்லது உங்கள் ஆதார் கார்டின் நகலைப் பெற விரும்பினாலோ யு.ஐ.டி.ஏ.ஐ-யிடமிருந்து சரியான பயனர் உரிமம் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments