புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு





    தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 13-ந்தேதி முதல் திறக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாகனங்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் பஸ்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் நேற்று ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தன.

அதிகாரிகள் ஆய்வு

வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்கப் பதிவேடு, நடப்பில் உள்ள முதலுதவிப் பெட்டி, அவசரவழி, தீயணைப்பு கருவி, ஓட்டுனர் பெயர்வில்லை பொருத்திய உரிய சீருடை, படிக்கட்டுகள், கதவுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா? என கலெக்டர் கவிதாராமு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் புதுக்கோட்டை பகுதியில் 269 வாகனங்களும், அறந்தாங்கி பகுதியில் 120 வாகனங்களும், இலுப்பூர் பகுதியில் 82 வாகனங்களும், ஆலங்குடி பகுதியில் 36 வாகனங்களும் என மொத்தம் 507 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் குறைபாடு உள்ள வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்பு இயக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய்சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கருணாகரன் (பொறுப்பு, புதுக்கோட்டை), சொர்ணராஜ் (அறந்தாங்கி), குழந்தைசாமி (இலுப்பூர்), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆட்டோ உள்பட பிற வாகனங்கள்...

பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோ உள்பட பிற வாகனங்களையும் கண்காணித்து அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments