ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
            தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து 2022-23-ம் ஆண்டில் ரூ.12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்து தரப்படும் என வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

            புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-2022-ல் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பான குறு வட்டங்களில் உள்ள ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அரசு வெளியிட்ட ஆணையின்படி, 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கும், 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3 லட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ரூ.75 ஆயிரமும், நீர் வினியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்பு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2½ லட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றால், அதற்கான கூடுதல் செலவினை விவசாயிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்திட்டத்திற்காக இதுவரை விவசாயிகளை கண்டறிந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட புதுக்கோட்டை, அறந்தாங்கி வேளாண்மைதுறை செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்து உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments