ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு தடை




        நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வருகிற 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மறுசுழற்சி செய்வது கடினம்

பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. நீண்ட ஆண்டுகளுக்கு நமது சுற்றுப்புறத்தில் அழியாமல் தங்கி இறுதியில் மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறி, முதலில் நமது உணவு ஆதாரங்களிலும் பின் நம் உடலிலும் நுழைகின்றன. ஒருமுறை தூக்கி எறியும் பிளாஸ்டிக் பெட்ரோலியம் சார்ந்தவை என்பதால், அவற்றை மறுசுழற்சி செய்வது கடினம். பெரும்பாலும் இவை நம் சுற்றுப்புறத்தில் இருந்து சரியான முறையில் அகற்றப்படுவது இல்லை.

உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஆகும்.

இவ்வகை பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் முதல் 100 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்று உள்ளது. எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மற்றும் சேவைகளை நோக்கி நகர்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

1-ந் தேதி முதல்...

இதையடுத்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் விரிவான செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 12-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருளின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, வினியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் 1-ந் தேதி முதல் தடை செய்யப்படும்.

தண்டனை, அபராதம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்க வேண்டாம் என தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் புதிய வணிக உரிமங்களை வழங்க உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டால் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும். தடையை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இந்தியாவில் 2019-20-ம் ஆண்டில் 34 லட்சம் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகியுள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் அபாயகரமான புகை மற்றும் வாயுக்களை வெளியிடுவதால் இவற்றை எரிக்க முடியாது. எனவே, மறுசுழற்சி தவிர பிளாஸ்டிக் பொருட்களை சேமிப்பது மட்டுமே சாத்தியமான தீர்வாக உள்ளது. இந்த தடை பிளாஸ்டிக் கழிவை குறைக்க பெரிதும் உதவும்.

அதிக அவகாசம்

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் கூறுகையில், ‘ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு மக்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அதிக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ந்தேதி முதல் இந்த தடை அமல்படுத்தப்படுகிறது.

அனைத்து தரப்பினரும் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சோதனைச்சாவடிகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments