மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் இறந்த ஒடிசா மாநில தொழிலாளியின் உடலை சொந்த கிராமத்திற்கு 28 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ்சில் 3600 கி.மீ தூரம் கொண்டு சென்று குடும்பத்தாரிடம் ஒப்படைத்த CPIM நிர்வாகிகள்







விபத்தில் இறந்த ஒடிசா தொழிலாளியின் உடலை -ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கே கொண்டுபோன தோழர்கள்! அலாவுதீன், அசாருதீன் ஆகியோருக்கு பாராட்டு

மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை யில் லாரி மோதி இறந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் உடலை அவருடைய சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ்சில் கொண்டு சென்று குடும்பத்தாரிடம் ஒப்படைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த  அலாவுதீன், அசாருதீன் ஆகியோருக்கு கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டுத்தெரிவித்தனர். 









புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியான பாலக்குடியில் உள்ள தனியார் இறால் கம்பெனியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான பகவான்ராணா கடந்த மாதம் 28ஆம் தேதி தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் தொண்டி - மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மீமிசல் அருகே மணல் ஏற்றிக் கொண்டுவந்த லாரி இரண்டு இரு சக்கர வாகனத்தில் பின்னால் மோதியதில் இரு வாகனத்தில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். 

இதில் ஒடிசாவை சேர்ந்த பகவான்ராணாவின் உடல்  மணமேல்குடி அரசு மருத்துவமனை யில் உடற்கூராய்வு செய்யப்பட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவருடன் பணி புரிந்த நண்பர்கள் இறந்த பகவான் ராணா உடலை ஒடிசா மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல முயற்சி மேற்கொண்டனர். அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் கவனத்திற்கு வந்தது. இறந்த ராணாவின் நண்பர்களிடமும் அவர் வேலை பார்த்த கம்பெனி உரிமையாளரிடமும் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் பேசினார்.  பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வடக்கு அம்மாபட்டினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கிளை மற்றும் மஸ்ஜித்  கலாச்சார மேம்பாடு அறக்கட்டளை சார்பாக மக்களுக்கு சேவையாற்றி வந்த ஆம்புலன்ஸில் பகவான்ராணா உடலை அவருடைய சொந்த ஊரான ஒடிசா மாநிலம் கொடிபகல் கிராமத்தில் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வடக்கு அம்மாபட்டினம் மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் அசாருதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் அலாவுதீன் ஆகிய இருவரையும் கேட்டுக்கொண்டார். 

அதனை அடுத்து வழக்கறிஞர் அலாவுதீன், அசாருதீன் இருவரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பகவான்ராணாவின் உடலை மார்க்சிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், முன்னிலையில் பெற்று கடந்த 30ஆம்  தேதி பகவான்ராணாவின் ஊரை சேர்ந்த  மூன்று நபர்களுடன் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு ஒடிசா  புறப்பட்டது. சென்னை, ஆந்திரா மாநிலம், விஜய வாடா, விசாகபட்டிணம். ஒரிசா மாநிலம் ரயாகடா. மதன்ராம்பூர் வழியாக 1750  கிலோமீட்டர் தூரம் 28 மணிநேர பயணத்திற்கு பிறகு கொடிபகல் கிராமத்திற்கு சென்று பகவான்ராணாவின் உடல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 




எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மாற்றி மாற்றி ஆம்புலன்சை இயக்கி அர்ப்பணிப்பு உள்ளத்தோடு சேவை யாற்றி விஜயவாடா, சென்னை வழியாக  திங்கட்கிழமை (4ஆம் தேதி) காலை 10  மணிக்கு அறந்தாங்கி வந்து சேர்ந்தனர். வழக்கறிஞர் அலாவுதீன், அசாருதீன் ஆகியோர். அவர்கள் இருவருக்கும் அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் கவிவர்மன், தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வரதராஜன், செயலாளர் மலையப்பன், பொருளாளர் கிரீன்முகம்மது, அசோக் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தங்கராஜ், கணேசன், நாராயணமூர்த்தி, கௌதம் பாண்டி, சங்கர் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து கோஷம் எழுப்பி பாராட்டினர். அலாவுதின், அசாருதீன் சேவையை சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் வெகுவாகப் பாராட்டினர்

நன்றி: தீக்கதிர் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments