கிழக்கு மண்டல கைப்பந்து போட்டி: திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி வெற்றி
    அரியலூரில் நடைபெற்ற கிழக்கு மண்டல கைப்பந்து போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி வெற்றி பெற்றது.

அரியலூர்
கைப்பந்து போட்டி

தமிழ்நாடு கிழக்கு மண்டல சீனியர் கைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று காலை தொடங்கியது. பகல், இரவு ஆட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில் திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் திருவாரூர் உள்ளிட்ட கிழக்கு மண்டலத்தை சார்ந்த 10 மாவட்டங்களை சார்ந்த வீரர்கள் பங்கேற்றனர். நாக்கவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் திருச்சி செயின்ஜோசப் கல்லூரி அணி, ஜமால் முகமது திருச்சி அணி, மயிலாடுதுறை அணி, விழுப்புரம் தளபதி அணி, வேல் உடையார் திருவாரூர், நாகை அன்னை தெரசா, அறிஞர் அண்ணா ஆகிய அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதி போட்டி

பின்னர் நடைபெற்ற அரை இறுதி போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியும், மயிலாடுதுறை அணியும் மோதின. இதில், ஜமால் முகமது கல்லூரி அணி 25-20, 25-15 என்ற கோல் கணக்கில் மயிலாடுதுறை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி அணியும், விழுப்புரம் தளபதி அணியும் மோதினர். இதில், விழுப்புரம் தளபதி அணி 25-23, 25-27, 25-16 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
 
இதையடுத்து, திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியும், விழுப்புரம் தளபதி அணியினரும் இறுதிப் போட்டியில் மோதினர். இதில் ஜமால் முகமது கல்லூரி அணி 25-16, 25-14 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது. 2-வது இடத்தை விழுப்புரம் தளபதி அணி பெற்றது.

பரிசு

3 மற்றும் 4-ம் இடத்திற்கான போட்டியில் மயிலாடுதுறை அணியும், விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி அணியும் மோதின. இதில் 25-15, 25-18 என்ற புள்ளி கணக்கில் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி அணி வெற்றி பெற்று 3-வது இடத்தை கைப்பற்றியது. 4-ம் இடத்தை மயிலாடுதுறை அணி கைப்பற்றியது. இதையடுத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா பரிசுகளை வழங்கினார்.

முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள மாநில சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பார்கள். போட்டியின் நடுவர்களாக கிருஷ்ணராஜ், முத்துகிருஷ்ணன், பன்னீர்செல்வம், சந்திரசேகர், சுரேஷ்குமார் ஆகியோர் பணியாற்றினர் ‌போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட கைப்பந்து அசோசியேஷன் கழகத்தினர் செய்திருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments