தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 4வது நாளான இன்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர் மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


 இதனிடையே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன், சிபிஎஸ் இ நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார். கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்கம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments