புதுக்கோட்டையில் கார், வாகனங்களின் பேட்டரிகளை திருடிய 2 வாலிபர்கள் கைது தப்பியோடிய மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
புதுக்கோட்டையில் கார், வாகனங்களின் பேட்டரிகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கார் திருட்டு

புதுக்கோட்டை சார்லஸ் நகரில் கார் ஷோரூமில் கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி புதிய கார் ஒன்று திருட்டு போனது. இதேபோல திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள், பொக்லைன் எந்திரங்களில் இருந்தும் பேட்டரிகள் தொடர்ந்து திருட்டுபோனது.

இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை மற்றும் புதுக்கோட்டை நகர உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினர் சேர்ந்து திருட்டு குற்றங்கள் நடந்த இடங்களில் இருந்த 100-க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்டம், மணிகண்டம் பகுதியை சேர்ந்த சுலைமான் மகன் நைனாமுகமது, சண்முகம் மகன் சதீஷ்குமார் (வயது 22), முருகன் மகன் கார்த்திக் (21) ஆகிய மூவரும் சேர்ந்து மேற்படி குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டை நகர பகுதிகளில் வாகன பேட்டரிகளை திருடிக் கொண்டு நேற்று மதியம் வெள்ளாற்று பாலத்தின் அருகே ஏற்கனவே திருடிய காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்தில் இருந்த போலீசார் காரை மடக்கி 3 பேரையும் பிடிக்க முயன்ற போது, அதில் நைனாமுகமது மட்டும் தப்பியோடினார். சதீஷ்குமார், கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

பேட்டரிகள் பறிமுதல்

கைதானவர்களிடம் விசாரித்ததில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் பேட்டரிகளை திருடியது தெரியவந்தது. புதுக்கோட்டையில் ஷோரூமில் திருடிய காரை மீட்டதோடு, மேலும் வாகனங்களின் 15 பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.

கைதான 2 பேர் மீது திருட்டு வழக்குகளும், கஞ்சா வழக்குகளும், நிலுவையில் உள்ளது. தப்பியோடிய நைனாமுகமது மீது பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்குகளும் வழிப்பறி வழக்குகளும், கஞ்சா வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தப்பியோடிய அவரை கைது செய்ய தனிப்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments