சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிவது மீண்டும் கட்டாயம்! அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை!!சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என விமான நிலைய ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள், விமான நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் படிப்படியாக மிகப்பெரும் அளவு குறைந்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது பெருமளவு குறைந்து வருகின்றன.இதையடுத்து சென்னை விமான நிலைய ஆணையகம் சார்பில் பன்னாட்டு விமான நிலையப்பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் பயணிகளை எச்சரிக்கும் விதமாக 'ஸ்டிக்கர்'களை ஒட்டி உள்ளனர். 

அத்துடன் சென்னை விமான நிலைய ஆணையக சமூக வலைதள பக்கத்திலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனா். அதில், "கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே விமான பயணிகள், விமான நிலையத்துக்கு வருபவர்கள், விமான நிலைய ஊழியா்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்துக்குள் அனுமதி இல்லை. 

விமான பயணிகள் அனைவரும் பயணநேரம் முழுமையும் கண்டிப்பாக முக கவசத்தை முறையாக வாய், மூக்கு மூடியிருக்கும் விதத்தில் அணிந்திருக்க வேண்டும். சில பயணிகள் தொடா்ந்து முககவசம் அணிவதால் சுவாச பிரச்சினை போன்றவைகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட பயணிகள் முறையான அனுமதிபெற்று முககவசம் அணிவதில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். 

முக கவசம் அணியாதவர்கள் மீது கொரோனா பாதுகாப்பு விதிமுறை சட்டத்தின்படி அபராதம் மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை விமான நிலையத்தில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

கொரோனா நமது நாட்டில் முழுமையாக நீங்கி விட்டது என்று மத்திய அரசின் சுகாதாரத்துறையிடம் இருந்து அறிவிப்பு வரும் வரையில் சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments