புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவு.! நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!!



புதுக்கோட்டை நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் தலைமை தாங்கினார். நகராட்சி துணை தலைவர் லியாகத் அலி, ஆணையர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த கவுன்சிலர் பர்வேஸ் பேசுகையில், ‘‘தனது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணியின் பலகையில் கவுன்சிலர் பெயர் இடம் பெறாமல் தி.மு.க. வட்ட செயலாளர் பெயர் இடம்பெற்றிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அவமானம் செய்வது போன்ற செயலாகும்’’ என்றார். உடனே அ.தி.மு.க.வை சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவரும் தனது வார்டில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் குடிநீர் திட்டப்பணியில் எனது பெயர் இடம்பெறவில்லை என்றார். 

அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், கடந்த ஆட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் பெயர் இடம் பெறாமல் செய்தனர் என கூறினர். இதனால் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. வளர்ச்சி திட்டங்களில் வைக்கப்படும் பலகையில் கவுன்சிலர்கள் பெயர் இடம் பெறும் என துணை தலைவர் லியாகத் அலி தெரிவித்தார். கவுன்சிலர்கள் சிலர் தங்கள் வார்டில் உள்ள கோரிக்கைகள் குறித்தும் பேசினர். நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் பதில் அளிக்கையில், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். கூட்டத்தில் 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் நகராட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட மேம்பாடு பணி நடைபெறும் போது 6 முதல் 12 மாதங்கள் வரை தண்ணீர் வழங்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை வரும் என்பதால், அதற்கு மாற்றாக புதிதாக நீராதாரம் கண்டறிவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய கட்டிடத்தில் பல இடங்களில் சேதமடைந்துள்ள நிலையில், அதனை இடித்து விட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும், இதற்கான புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்யவும் அனுமதி பெறப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments