அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
கடந்த ஆட்சி காலங்களில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக அரசு பள்ளிகளில் படித்துவிட்டு உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் அறிவிக்கப்பட்டது.
புதுமைப்பெண் திட்டம் இந்த திட்டம் தற்போது மாணவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாயை செலுத்தும் விதத்தில் புதுமைப்பெண் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சென்னை, பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டெல்லி முதல்-மந்திரிஅரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக புதுமைப்பெண் திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு உயர் கல்வி அளித்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்தல், உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை அரசு பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும். மாணவிகள் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். புதுமைப்பெண் திட்டத்தில் சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, இளங்கலை பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதன்படி இளங்கலை மாணவிகளுக்கு 3 ஆண்டுகளும், தொழிற்கல்வி கற்கும் மாணவிகளுக்கு 4 ஆண்டுகளும், மருத்துவம் படிக்கும் மாணவிகளுக்கு 5 ஆண்டுகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர்.
அந்த வகையில் முதற்கட்டமாக ஒரு லட்சம் கல்லூரி மாணவிகள் இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் 2,500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய புதுமைப்பெண் பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை (டெபிட் அட்டை) ஆகியவை வழங்கப்பட்டன டெபிட் அட்டையை மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இணைந்து வழங்கினர். இவ்விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அனைவரையும் வரவேற்றார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.