குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடல் சொந்த ஊரில் தகனம் - அமைச்சர்கள் அஞ்சலிதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது 40). பி.காம். பட்டதாரியான முத்துக்குமரன்,, சொந்த ஊரில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் ஒரு நபரிடம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கி கடந்த 3-ந் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.

அங்கு தனக்கு கிளா்க் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துச்சென்ற முத்துக்குமரனுக்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை கிடைத்தது. இதுகுறித்து முத்துக்குமரன் அந்த முதலாளியிடம் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமரன் கடந்த 7-ந் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் முயற்சியால் நேற்று முன்தினம் இரவு அவரது உடல் குவைத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று மதியம் 2.30 மணியளவில் திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான் மற்றும் பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் முத்துக்குமரன் உடல் அவரது சொந்த ஊரான ெலட்சுமாங்குடிக்கு மாலை 6.30 மணிக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மரக்கடை சாலையில் இருந்து அமரர் ஊர்தியில் முத்துக்குமரன் உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அவரது உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதும், முத்துக்குமரனின் மனைவி வித்யா கதறி அழுதார்.

அப்போது அருகில் நின்று கொண்டு இருந்த அவர்களது மகன்கள் நிதீஷ்குமார், ரிஷிகுமார் ஆகிய இருவரும் தந்தையின் உடலை பார்த்தும், தாயின் கதறலை கேட்டும் தேம்பி, தேம்பி அழுதனர்.

பின்னர் முத்துக்குமரன் உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு திரண்டு இருந்த மக்கள் முத்துக்குமரன் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் லெட்சுமாங்குடியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments