இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் மொகாலியில் இன்று நடக்கிறது
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது.

20 ஓவர் கிரிக்கெட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வெறும் 6 நாட்களில் (செப்.20, 23, 25) முடிந்து விடுகிறது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிய கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா விளையாடும் முதல் போட்டி இதுவாகும். அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் தங்களை சீரிய முறையில் தயார்படுத்திக் கொள்ள இந்த தொடர் உதவிகரமாக இருக்கும்.

மீண்டும் அசத்துவாரா கோலி?

ஆசிய கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசி மீண்டும் பார்முக்கு திரும்பிய விராட் கோலியின் பேட்டிங் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவருக்கு ஆஸ்திரேலிய பவுலர்கள் பவுன்சர்களை வீசி குடைச்சல் கொடுக்கக்கூடும் என்பதால் கோலி நிறைய பவுன்சர் பந்து களை எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டார். இதே போல் கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் நல்ல தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். ஆசிய கிரிக்கெட்டில் மந்தமாக ஆடியதால் விமர்சிக்கப்பட்ட ராகுல், அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நெருக்கடியில் உள்ளார். மிடில் வரிசை தான் இந்தியாவுக்கு எப்போதும் மெச்சும்படி இருப்பதில்லை. அதை சரி செய்வதில் இந்த முறை கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம்.

காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் அணிக்கு திரும்பியிருப்பது பந்து வீச்சை வலுப்படுத்தும். காயத்தால் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறாத நிலையில் மற்றொரு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்தினால் அது அணிக்கு உற்சாகம் தரும்.

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகிய முன்னணி வீரர்களுக்கு லேசான காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அந்த அணி வலுவாகவே தென்படுகிறது. ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல் அதிரடியில் மிரட்டுவார்கள். ஆல்-ரவுண்டர் டிம் டேவிட் அறிமுக வீரராக விளையாட இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. பந்து வீச்சில் ஹேசில்வுட், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

பிஞ்ச் பேட்டி

அதே சமயம் கேப்டன் ஆரோன் பிஞ்ச், சமீப காலமாக போதிய ரன் எடுக்க முடியாமல் தடுமாறுவது தான் அந்த அணிக்கு சற்று பலவீனமாக பார்க்கப்படுகிறது. பழைய நிலைக்கு திரும்ப இந்திய போட்டியை பயன்படுத்தி கொள்ளும் ஆவலில் உள்ளார்.

பிஞ்ச் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த தொடரில் நாங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவுகளும் உலக கோப்பை நோக்கியே இருக்கும். முந்தைய தினம் மொகாலி ஆடுகளத்தை பார்த்தேன். கொஞ்சம் புற்கள் இருந்தது. இங்குள்ள ஆடுகளத்தில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்ய முடியும்.

இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 71 சதங்கள் அடித்துள்ளார். அவரது ஆட்டத்திறன் வீழ்ச்சியடைவதாக சொல்வது அபத்தமானது. 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் தனது ஆட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். உலகின் சிறந்த வீரரான அவருக்கு எதிராக பந்து வீசுவதற்கு நன்றாக தயாராக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. போட்டி நடக்கும் மொகாலி மைதானத்தில் இதுவரை ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது. இதில் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை சூப்பர்10 சுற்றில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் அடங்கும்.

இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் அல்லது தீபக் ஹூடா அல்லது அக்‌ஷர் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஜோஷ் இங்லிஷ், ஸ்டீவன் சுமித், டிம் டேவிட், கேமரூன் கிரீன், மேத்யூ வேட், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது ஆஷ்டன் அகர்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments