புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரிடர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு




பேரிடர் மேலாண்மை

காரையூர் அருகே உள்ள ஒலியமங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொன்னமராவதி தாலுகா வருவாய்த்துறை சார்பில் இயற்கை பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நடைபெற்றது. அப்போது, இடி-மின்னலின் போது குடையை பயன்படுத்த கூடாது. மின்னல் தாக்கத்தின் போது திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்கக்கூடாது. இயற்கை இடர்பாடுகள், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித்தவித்தால் பொதுமக்களை எவ்வாறு மீட்பது, பேரிடர் காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு போட்டிகள்

தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் குறித்த ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காரையூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, ஒலியமங்களம் கிராம நிர்வாக அலுவலர் பச்சையப்பன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரையூர் அருகே முள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேலத்தானியம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ் பரிசு வழங்கினார்.

கறம்பக்குடி, ஆவூர்

கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி பரிசுகளை வழங்கினார்.

விராலிமலை ஒன்றியம், சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கு விராலிமலை தாசில்தார் சதீஷ் தலைமை தாங்கி ேபசினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் புகாரி வரவேற்றார். முடிவில் நீர்பழனி வருவாய் ஆய்வாளர் சுரேந்திரன் நன்றி கூறினார்.

பொன்னமராவதி

பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் அன்னை வேளாங்கண்ணி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பொன்னமராவதி நாகப்பா செட்டியார் நினைவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

அன்னவாசல்

அன்னவாசல் அருகே கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் தலைமை தாங்கினார். இதில் இலுப்பூர் தாசில்தார் வெள்ளைச்சாமி, மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டி அரசு நடுநிலைபள்ளியில் போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments