ரேஷன்கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்த கூடாது கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உத்தரவு





ரேஷன்கடைகளில் இதர பொருட்கள்

தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் சோப்பு, உப்பு, மஞ்சள்தூள் உள்ளிட்ட இதர பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன்பொருட்களை வாங்கும் மக்களை சோப்பு உள்ளிட்ட இதர பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்துவதாக பல பகுதிகளில் மக்கள் குற்றம்சாட்டினர். அந்த மக்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில், அது தொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது. இதற்கிடையே ‘தினத்தந்தி’ செய்தியின் எதிரொலியாக ரேஷன்கடைகளில் சோப்பு உள்ளிட்ட இதர பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உத்தரவிட்டார்.

அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன்கோட்டையில் நேற்று நடைபெற்ற ரேஷன்கடை திறப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதிலும் குறிப்பாக கல்வி மேம்பாட்டுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி உயர்கல்வி பெற்று திறமைசாலிகளாக உருவாக வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் என்ற வகையில், அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய திட்டங்களை வகுத்து முதல்-அமைச்சர் செயல்படுகிறார்.

கட்டாயப்படுத்த கூடாது

கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை கேட்டு தற்போது ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன்கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை விருப்பம் உள்ளவர்கள் வாங்கி பயன்பெறலாம். அதேநேரம் அந்த பொருட்களை வாங்கும்படி மக்களை கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு பொருட்களை வாங்கும்படி மக்களை கட்டாயப்படுத்தும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து ரேஷன்கடைகளுக்கும் புதிய கட்டிடம் கட்டப்படும். தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் ரேஷன்கார்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து முழுநேர, பகுதிநேர ரேஷன்கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments