துப்பாக்கி முனையில் மோசடியில் ஈடுபட வைக்கும் கும்பல்: மியான்மரில் இருந்து ரூ.5 லட்சம் பிணைத் தொகை கொடுத்து தப்பி வந்த நாகப்பட்டினம் வாலிபர்!!



துப்பாக்கி முனையில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட வைக்கப்பட்டதாக, மியான்மரில் இருந்து ரூ.5 லட்சம் பிணைத் தொகை கொடுத்து தப்பி வந்த நாகப்பட்டினம் வாலிபர் பகீர் தகவலை கூறினார். மேலும், தமிழர்கள் பலர் அங்கு சிக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தாலும், அவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. இதனால், என்ஜினீயரிங் படித்துவிட்டு பலர் கட்டிட வேலைக்கு செல்லும் அவலநிலை தொடர்கிறது.

‘‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’’ என்று சொல்வார்களே, அதை பலர் நெஞ்சில் நிறுத்தி, வெளிநாட்டுக்கும் வேலை தேடி சென்று விடுகிறார்கள். அப்படி வேலை தேடி செல்பவர்களில் பலர் உரிய வேலை, குறித்த சம்பளம் வழங்கப்படாமல் ஏமாற்றப்படுகிறார்கள்.

அந்த வகையில், மியான்மரில் 50 தமிழர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக கடத்திச் செல்லப்படும் இவர்கள், சமூக விரோத செயல்களில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அவ்வாறு சிக்கி தவித்த நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ஆசிப் என்ற வாலிபர், தற்போது அவர்கள் கேட்ட 6 ஆயிரம் டாலர் (ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 533) பிணைத் தொகையாக செலுத்தி மீண்டு வந்திருக்கிறார்.

அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது கணத்த இதயத்துடன் கூறியதாவது:-

நான் டிப்ளமோ ஐ.டி. படித்திருக்கிறேன். இங்கு வேலை கிடைக்காததால் கடந்த ஜனவரி மாதம் வேலை தேடி முதலில் துபாய் சென்றேன். அங்கு சரியான வேலை கிடைக்காததால் ஓட்டல்களில் சர்வர் வேலை பார்த்தேன். அதன் மூலம் கிடைத்த வருமானம் எனக்கு போதவில்லை. இதனால், வேறு வேலை தேடிக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில், பேஸ்புக்கில் கால் சென்டரில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்தேன். மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறப்பட்டிருந்தது. அதில், கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டேன். கேரளாவை சேர்ந்த அணுராகவ் என்பவர் என்னிடம் பேசினார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வேலை என்று கூறினார். நானும் சம்மதித்தேன்.

உடனே, துபாயில் இருந்து பாங்காக் செல்வதற்கான ஏற்பாடுகளை அவர் செய்தார். துபாயில் இருந்து நான் புறப்பட்ட விமானம் டெல்லி வழியாகத்தான் பாங்காக் சென்றது. டெல்லியில் தரை இறங்கியபோது, சொந்த ஊருக்கே திரும்பி சென்று விடலாமா? என்று எனக்கு தோன்றியது. ஆனால், வேலை பார்த்து பணம் சாம்பாதிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில், மனதை கல்லாக்கிக் கொண்டு பாங்காக் சென்றேன்.

ஜூலை 22-ந்தேதி பாங்காக் சென்ற என்னை, விமான நிலையத்தில் அங்குள்ள போலீசார் சோதனை செய்தனர். எனக்கு பயமாக இருந்தது. என்னை புகைப்படம் எடுத்துக் கொண்டு, மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர்.

அதன்பின்னர், என்னை காரில் அழைத்து சென்றவர்கள், ஒருநாள் மட்டும் பாங்காக்கில் உள்ள ஓட்டலில் தங்க வைத்தனர். பாஸ்போர்ட், விசா போன்றவற்றை வாங்கிக் கொண்டனர். அங்கிருந்து என்னை எங்கு அழைத்து செல்வீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் எதுவும் பதில் அளிக்கவில்லை. ஆனால், வாட்ஸ்-அப் மெசேஜ் மூலம் எனக்கு தகவல் வந்தது.
அடுத்த நாள் அரை மணி நேர பயணத்தில் ஒரு இடத்துக்கு அழைத்து செல்வதாக கூறி என்னை காரில் ஏற்றினார்கள். ஆனால், 9 மணி நேர தொடர் பயணத்துக்கு பிறகு மலைப்பகுதி ஒன்றுக்கு என்னை கொண்டு சென்றனர். அங்குள்ளவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தனர். நான் எதுபற்றி கேட்டாலும், உடனே துப்பாக்கியை தலையில் வைத்து சுட்டு விடுவதாக மிரட்டுவார்கள். இதனால், பயத்தில் நான் எதுவும் பேசவில்லை. ஆனால், பிரச்சினையில் சிக்கிக் கொண்டுவிட்டோம் என்பது மட்டும் எனக்கு தெரிந்தது.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கு துப்பாக்கி முனையில் என்னை வெளியே அழைத்து சென்றனர். அது பாங்காக்கின் எல்லைப் பகுதி. அங்கு பெரிய ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. படகில் என்னை ஏற்றிக் கொண்டு அந்த ஆற்றை கடந்தனர். அடுத்த கரையில், காட்டுவாசிகள் போல் உடை அணிந்தபடி, கையில் துப்பாக்கியுடன் இருந்த 4 பேரிடம் என்னை ஒப்படைத்துவிட்டு அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

அந்தப் பகுதி மியான்மர் எல்லைப் பகுதி ஆகும். அந்த 4 பேரும் கன்னத்தில் ஏதோ சாயம் பூசியிருந்தனர். இடுப்பு பகுதியில் பெரிய அளவிலான வாளையும் தொங்க விட்டிருந்தனர். அவர்கள் என்னை அழைத்து சென்றபோது, வழியில் சோதனை சாவடியில் அங்குள்ள ராணுவத்தினர் சோதனை செய்ததுடன், புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர், அந்த 4 பேரும் என்னை குடியிருப்பு ஒன்றில் தங்க வைத்தனர். அந்த பகுதியில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலானோர் சீனாவை சேர்ந்தவர்கள். 3 மாதம் இங்குதான் வேலை என்றனர். சாப்பிட நாய், பன்றி, மாட்டுக்கறியை வழங்கினர். அதில், சாப்பிட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது.

22 நாட்கள் அங்குதான் நான் இருந்தேன். ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட வைக்கும் கும்பல் அது என்பது தெரியவந்தது. அவர்கள் குறிவைப்பது, அமெரிக்கா, இந்தியா, கனடாவை சேர்ந்தவர்களைத்தான்.

இதற்காக, ஐ.டி. படித்தவர்களை அதிகம் பேரை வேலைக்கு எடுத்து வைத்துள்ளனர். பல்வேறு குழுவாக தமிழகத்தை சேர்ந்த 300 பேர் அங்கு பிரித்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில், இளம்பெண்களும் இருக்கின்றனர். கேரளாவை சேர்ந்தவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.

எங்களுக்கு தினமும் 15 மணி நேர வேலை. இரவுதான் வேலை தொடங்கும். ஒவ்வொருவராக ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு, அவர்களிடம் லாவகமாக பேசி வங்கி கணக்கை பெற்று, அதில் இருக்கும் பணத்தை எடுத்து, குறிப்பிட்ட வங்கி எண்ணுக்கு அனுப்பிவிட வேண்டும்.

இப்படி, தினமும் பணமோசடியில் ஈடுபட வைத்தனர். அதே நேரத்தில், கம்ப்யூட்டர் இணையதள ஐ.பி. எண்ணை போலீசார் கண்டுபிடித்துவிட்டால், உடனே அந்த கம்ப்யூட்டரையே உடைத்து எறிந்துவிடுகின்றனர். நான் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று தினமும் அவர்களிடம் கெஞ்சினேன். அதற்கு அவர்கள், 3 மாதம் வேலை பார்க்க வேண்டும். அல்லது 6 ஆயிரம் டாலர் பணம் கொடுத்தால் விட்டுவிடுவதாக சொன்னார்கள்.

நான் உடனே ஊரில் உள்ள எனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பணத்துக்கு ஏற்பாடு செய்தேன். அந்த பணத்தை எனது வங்கிக் கணக்குக்கு பெற்று, அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைத்தேன்.அதை அவர்கள் உறுதி செய்த பின்னர் என்னை விட்டுவிடுவதாக கூறினார்கள். நாடு திரும்ப விசாவுக்கு ஏற்பாடு செய்தனர். மியான்மர் எல்லையில் இருந்து பாங்காக்கிற்கு படகு மூலம் முன்புபோல் அழைத்து வந்தனர். அப்போது, எதிர்திசையில் 10-க்கும் மேற்பட்ட தமிழர்களை அழைத்துக் கொண்டு மற்றொரு படகு மியான்மர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இப்படி தினமும் பலர் வேலை தேடி வந்து, சதி வலையில் சிக்கிக்கொள்கிறார்கள். இது தொடர்கதையாக நடக்கிறது. அந்த மோசடி விளம்பரம் இன்னும் பேஸ்புக்கில் இருக்கத்தான் செய்கிறது.
நான் பாங்காக் வந்து இறங்கியபோதுதான் எனக்கு உயிரே வந்தது. நாடு திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கை பிறந்தது. தற்போது, நான் சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். பணத்தை தேடச் சென்று கடைசியில் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.
இவ்வாறு அவர் வருத்தத்துடன் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments