திருச்சி மக்களே ஜாக்கிரதை! உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல்!! அரசு மருத்துவமனை டீன் எச்சரிக்கை!!!



திருச்சியில் பரவி வரும் 'ஸ்க்ரப் டைபஸ்' என்ற புதிய வகை காய்ச்சல் மக்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு எச்சரித்துள்ளார்.

இந்த வகை காய்ச்சல் யார் யாருக்கெல்லாம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறிய அவர், இந்நோய்க்கான அறிகுறிகளை பற்றியும் விளக்கமாக கூறியுள்ளார்.

மேலும், இந்த அறிகுறிகளை கொண்டவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும், சிறிது தாமதித்தாலும் உயிரை காப்பாற்ற முடியாத சூழலை உருவாக்கிவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

புதுப்புது காய்ச்சல்கள்...
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக பல வகை காய்ச்சல்கள் மக்களை தாக்கி வருகின்றன. குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா, பன்றிக் காய்ச்சல்,டெங்கு காய்ச்சல் ஆகியவை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. முதலில் குழந்தைகளை தாக்கி வந்த இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல், பிறகு பெரியவர்களுக்கு பரவத் தொடங்கியது. அத்துடன் பன்றிக் காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் சேர்ந்து கொண்டதால் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள்
இந்த காய்ச்சல் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்யும் வகையில் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை என பல இடங்களில் தொடர்ந்து காய்ச்சல் முகாம்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. மேலும், காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடைமுறையையும் அரசு மருத்துவமனைகள் தொடங்கியுள்ளன. காய்ச்சல் நோயாளிகளை கையாள மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் சிறப்பு பயிலரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

திருச்சியில் புதிய காய்ச்சல்..
இந்த சூழலில், திருச்சியில் கடந்த சில தினங்களாக புதிய வகை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது திடீரென அதிகரித்துள்ளது. இந்நிலையில், இது என்ன வகை காய்ச்சல் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:

ஸ்க்ரப் டைபஸ்.. பெண்களுக்கு அதிக பாதிப்பு
'ஸ்க்ரப் டைபஸ்' என்ற இந்த காய்ச்சல் 'ஒரியண்டா சுட்டுகாமோஷி' என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவை இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். 'உண்ணி காய்ச்சல்' என்று அழைக்கப்படும் இது அனைவரையும் பாதிக்கக்கூடியது தான். இருந்தபோதிலும், தற்போது இந்த காய்ச்சல் பெண்களை அதிக அளவில் தாக்கி வருகிறது. மண்ணில், தரையில் கைகளை வைத்து யார் அதிகம் புழங்குகிறார்களோ அவர்களை இந்த 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் எளிதில் தாக்கிவிடும்.

அறிகுறிகள் என்ன.. எப்படி பரவுகிறது? 
உடலில் மார்பகத்திற்கு கீழோ, மறைக்கப்பட்ட பகுதியிலோ, முதுகு பகுதியிலோ புண் போன்ற ஆறாத அறிகுறிகள் இருந்தாலும், அம்மைக்கு வரக்கூடிய சிறு சிறு புள்ளிகளாக வரக்கூடிய தோலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் போன்றவையும் இதன் அறிகுறிகள் தான். இவை சில நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மூளைக் காய்ச்சலாகவும் மாறிவிடுகிறது. வீட்டில் உள்ள செல்லப் பிராணிகள் வழியாகவும் இந்த உண்ணி காய்ச்சல் பரவுகிறது.

உயிருக்கு ஆபத்து இந்த நோயின் அறிகுறிகளைக் கொண்டவர்கள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். அதை விடுத்து, மருந்தகங்களில் தாங்களாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். இந்த காய்ச்சல் ஒருகட்டத்தை தாண்டி 'சி' கேட்டகரிக்கு (C catagory) சென்றுவிட்டால் மருத்துவர்களாலும் காப்பாற்றுவது கடினமாகி விடும். இவ்வாறு டீன் நேரு கூறினார்.

Source: OneindiaTamil

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments