என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில்

என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பதற்கான பதிலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

என்ஜினீயரிங் கலந்தாய்வு

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை கேட்டு தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று பார்வையிட்டார். அதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-என்ஜினீயரிங் கலந்தாய்வு 2-வது சுற்றில், 31 ஆயிரத்து 94 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 23 ஆயிரத்து 458 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்ததில், 14 ஆயிரத்து 153 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5 ஆயிரத்து 16 பேர் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். 4 ஆயிரத்து 16 பேர் முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருக்கின்றனர். முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில், 10 ஆயிரத்து 351 இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசை பட்டியல் வருகிற 5-ந்தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வருகிற 8-ந்தேதி முதல் அவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்க உள்ளது. குறைவான மாணவ-மாணவிகளே விண்ணப்பித்திருப்பதால், ஒரே சுற்று கலந்தாய்விலேயே இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலி இடங்கள் இருக்காது

நீட் தேர்வின் விளைவினால்தான், கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஆகிறது. நீட் தேர்வு முடிவு தாமதமாக வந்ததுதான், இதற்கு முக்கிய காரணம். கடந்த முறை நீட் தேர்வு முடிவுக்கு முன்னதாக என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தியதால், அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் இடங்கள் அதிகம் காலியாகி இருந்தன. இந்த ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கையால் அதுபோன்ற காலி இடங்கள் இருக்காது.இதை தவிர்க்க மத்திய அரசிடம் முன்கூட்டியே நீட் தேர்வு முடிவை வெளியிட கேட்டோம். அதிலும் குறிப்பாக நாம் நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்லி வருகிறோம். அதனால் நீட் தேர்வை எடுத்துவிட்டாலோ, தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்டுவிட்டாலோ, கல்வியாண்டு தாமதமாவது தவிர்க்கப்படும்.

முதலாம் ஆண்டு வகுப்புகள்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை நன்றாகவே நடந்து வருகிறது. என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகளை பொறுத்தவரையில், 4 சுற்று கலந்தாய்வு முடிந்ததும், அக்டோபர் (இம்மாதம்) இறுதியில் தொடங்கும். முதலாம் ஆண்டில் சேரும் என்ஜினீயரிங் மாணவிகளில் அரசு பள்ளிகளில் படித்து சேர்ந்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்.பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வராண்டா அட்மிஷன் மூலம் சேர்ந்து கொள்ளலாம். கல்லூரிகளில் காலியிடங்கள் இருக்கும்பட்சத்தில் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்துக்கொள்ள முடியும். இதில் மாற்று கருத்து இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments