பதவியை தவறாக பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்ததாக புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை




பதவியை தவறாக பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்ததாக புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

புதுக்கோட்டையில் பத்திரப்பதிவு துறையில் மாவட்ட பதிவாளராக (தணிக்கை பிரிவு) பணியாற்றி வருபவர் அஞ்சனகுமார். இவரது வீடு புதுக்கோட்டையில் கே.எல்.கே.எஸ். நகரில் உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை அஞ்சனகுமாரின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அஞ்சனகுமார் வீட்டில் இருந்தார். வீட்டில் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர்.

இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ‘‘அஞ்சனகுமார் மதுரையில் பணியாற்றிய காலத்தில் தனது பதவியை பயன்படுத்தி முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. அஞ்சனகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாறுதலில் புதுக்கோட்டை வந்தார். அதனால் இங்குள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது ’’ என்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு?

முன்னதாக சோதனையின் போது வீட்டிற்குள் யாரும் செல்லாதபடி நுழைவு வாயில் கதவை போலீசார் மூடினர். வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டிற்குள் கதவினையும் போலீசார் உள்பக்கமாக பூட்டி சோதனை மேற்கொண்டனர். வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதோடு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனையானது நேற்று மாலை வரை நீடித்தது. அஞ்சனகுமார் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததின் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும், அவர் பணியாற்றிய இடங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments