ஜெகதாப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து முழு தகவல்!!



ஜெகதாப்பட்டினம் அருகே ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆம்னி பஸ்சில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் விசைப்படகு மூலம் பிடித்து வரப்படும் மீன்கள் இந்த பஸ்சில் தான் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் ஆம்னி பஸ் தொண்டியிலிருந்து, சென்னைக்கு புறப்பட்டது. பஸ்சை திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் விஜயகுமார் (வயது 39) ஓட்டினார். பஸ்சில் 2 பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ்சானது கோட்டைப்பட்டினம் அருகே மீமிசலுக்கு வந்தது. அங்கு 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோட்டைப்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜெகதாப்பட்டினம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் டிரைவர் விஜயகுமார், தொண்டியை சேர்ந்த நஜிபுன்னிசா (50), அவரது பேரன் அகமது (10), மீமிசல் பகுதியை சேர்ந்த அருள் பிரீத்தி (26), ஜேம்ஸ் பாலன் (30) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சை கிரேன் மூலம் தூக்கி சாலையின் ஓரத்தில் நிறுத்தினர். பஸ்சில் அதிக பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை. இந்த விபத்தினால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments