கம்போடியாவிற்கு போலி ஏஜெண்டால் விற்கப்பட்ட தமிழக இளைஞரை மீட்ட SDPI கட்சி!



கம்போடியாவிற்கு போலி ஏஜெண்டால் விற்கப்பட்ட தமிழக இளைஞரை SDPI கட்சி மீட்டது.

கம்போடியாவில் தமிழகத்தை சேர்ந்த 400 பேர் உணவின்றி சிக்கி தவித்து வருவதாக விமானம் மூலம் திருச்சி திரும்பிய புதுக்கோட்டை வாலிபர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தாலும், அவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. இதனால், என்ஜினீயரிங் படித்துவிட்டு பலர் கட்டிட வேலைக்கு செல்லும் அவலநிலை தொடர்கிறது.

‘‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’’ என்று சொல்வார்களே, அதை பலர் நெஞ்சில் நிறுத்தி, வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்று விடுகிறார்கள். அப்படி வேலை தேடி செல்பவர்களில் பலர் உரிய வேலை, குறித்த சம்பளம் வழங்கப்படாமல் ஏமாற்றப்படுகிறார்கள்.
மேலும் பலர் சுற்றுலா விசா, வணிக விசா உள்ளிட்டவைகள் மூலம் சென்று வெளிநாடுகளில் கொத்தடிமைகளாக சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் கோலாம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த கம்போடியாவில் வேலைபார்த்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சையது இப்ராகிம் (வயது 28) நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் வணிக விசாவில் கடந்த ஜூலை மாதம் ரூ.3 லட்சம் செலவு செய்து கம்போடியா சென்றேன். என்னை திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் அங்கு அனுப்பி வைத்தனர். கம்போடியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் என்னை 4 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்தார். அங்கு எனக்கு உரிய வேலை ஏதும் கொடுக்கவில்லை.

ஆயிரம் டாலர் சம்பளம் கொடுப்பேன் என்று கூறிவிட்டு, சம்பளம் கொடுக்காமல் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தினர். ஏதேனும் உதவி தேவை என்று கேட்டால் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

நான் முதலில் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கு தகவல் தெரிவித்தேன். பல்வேறு முயற்சிகளுக்கு இடையே எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் உதவியுடன் திருச்சி வந்து சேர்ந்தேன்.

தமிழகத்தை சேர்ந்த இன்னும் 400-க்கும் மேற்பட்டோர் கம்போடியாவில் சிக்கி தவித்து வருகின்றனர். அங்கு அவர்கள் சொல்லும் சமூக விரோத வேலையை செய்யவில்லை என்றால் அடிப்பது, உணவை கொடுக்காமல் விடுவது, மின்சாரத்தை உடலில் பாய்ச்சுவது போன்ற கொடுமைகளை செய்கின்றனர். அதற்கான வீடியோ என்னிடம் உள்ளது. துப்பாக்கி வைத்து மிரட்டுகின்றனர்.

இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்களே அவர்களிடம் பேச பயப்படுகிறார்கள். இப்போது தான் மீட்பதற்கு முயற்சி செய்கின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தி எல்லோரையும் காப்பாற்ற வேண்டும். கம்போடியாவில் சிக்கி உணவு இன்றி தவிப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவரை SDPI கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாவட்ட பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி ஆகியோர் வரவேற்றனர். மீட்கப்பட்ட பட்டதாரி சையத் மற்றும் குடும்பத்தினர் தனக்கு உதவி செய்த SDPI கட்சி நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments