ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் - பணம் வைத்து விளையாடினால் 3 மாதம் சிறை
சென்னை: தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்யவும், அந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் சுமைக்கு உள்ளாகி, இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வந்தது. காவல் துறையைச் சேர்ந்தவர்கூட தற்கொலை செய்துகொண்டார். எனவே, தமிழகத்தில் ஆன் லைன் சூதாட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

இதற்கிடையில், அரசு சார்பில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுவதாக 70 சதவீத ஆசிரியர்களும், கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுவதாக 67 சதவீதம் பேர், மாணவர்களின் அறிவுத் திறன், சிந்தனைத் திறன், எழுத்துத் திறன் குறைந்திருப்பதாக 74 சதவீதம் பேர், மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகரித்திருப்பதாக 76 சதவீதம் பேர், ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வதாக 72 சதவீத ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 735 பேரிடம் பெறப்பட்ட கருத்துகளில், 99 சதவீதம் பேர், அதாவது 10 ஆயிரத்து 708 பேர் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த தரவுகளின் அடிப்படையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகள், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்குவதால், ஏற்கெனவே உள்ள விதிகள் மற்றும் சட்டங்களைக் கொண்டு இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, புதிய சட்டம் இயற்ற அரசு முடிவுசெய்தது.

அதன்படி, தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதா-2022-ஐ உருவாக்கியது. அதற்கு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த அவசரச் சட்டம் வரும் 17-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முழுமையான சட்ட வடிவம் பெற உள்ளது. முன்னதாக, இந்த அவசரச் சட்டம் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த சட்டப்படி, தமிழகத்தில் பணத்தையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டு சேவை வழங்கும் நிறுவனங்கள், இனி அந்த சேவையை வழங்கவும் தடை விதிக்கப்படுகிறது. எந்த நிறுவனமும், எந்த வகையிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்ய தடைவிதிக்கப்படுகிறது.

இதுபோன்ற விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் விளையாடுவோர் இடையே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வங்கிகள், பேமென்ட் வங்கிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

பணத்தை வைத்து ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றை விளையாடினால் 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

அதேபோல, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஓராண்டு வரை சிறை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இதுபோன்ற சூதாட்டங்களில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள், அடுத்தடுத்து தண்டனை பெறும்போது ஓராண்டுக்குக் குறையாமல், 3 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தனி ஆணையத்தை அமைக்க வேண்டும். அந்த ஆணையத்தின் தலைவராக, அரசு தலைமைச் செயலருக்கு குறையாத பதவி வகித்து, ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும், காவல் துறை ஐ.ஜி., தகவல் தொழில்நுட்ப வல்லுநர், மனநல ஆலோசகர், ஆன்லைன் விளையாட்டில் அனுபவம் வாய்ந்த ஒருவர் ஆகியோரை உறுப்பினராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி வரவேற்பு

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பதிவுகளில் நேற்று கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும்.

கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகு 14 மாதங்களில் 29 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இனி தற்கொலைகள் தடுக்கப்படும். இம்மாத இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்துக்கு மாற்றான சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments