வரலாற்று சிறப்புமிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பழமையான ஆவணங்கள் கணினிமயமாக்கப்படுமா?
            வரலாற்று சிறப்பு மிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பழமையான ஆவணங்கள் கணினிமயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுக்கோட்டை சமஸ்தானம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனி வரலாறு உண்டு. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்தது. இதில் தொண்டைமான் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். புதுக்கோட்டையில் காணப்படும் பல பழமையான கட்டிடங்கள் தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் தான் கட்டப்பட்டவையாகும். புதுக்கோட்டை கோர்ட்டு கட்டிடங்கள், கலெக்டர் அலுவலக அரண்மனை உள்ளிட்ட கட்டிடங்கள் பழமையை போற்றும் வகையில் உள்ளன.

நாடு சுதந்திரம் பெற்ற பின்பு கடந்த 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி புதுக்கோட்டை சமஸ்தானத்தை டெல்லி சென்று சர்தார் வல்லபாய் படேலிடம் மன்னர் ராஜகோபால தொண்டைமான் ஒப்படைத்தார். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்து கடந்த 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி புதுக்கோட்டை தனிமாவட்டமாக உதயமானது.

பழமையான ஆவணங்கள்

வரலாற்று சிறப்பு மிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மன்னர்கள் ஆண்ட போது அவர்கள் கையாண்ட பழமையான ஆவணங்கள், குறிப்பேடுகள், வரலாறுகள் உள்ளிட்டவை ஆவணங்களாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை தற்போது புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒரு அறையில் தனியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களில் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை பொதுமக்கள் பலரும் அறிந்து கொள்ளும் வகையிலும், இன்றைய இளையதலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையிலும், ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதை பாதுகாக்கவும் அவை அனைத்தும் கணினிமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்தது.

இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆவணங்களை கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

கணினி மயமாக்கப்படுமா?

இதற்கிடையில் இந்த ஆவணங்களை கணினிமயமாக்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் இந்த பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இவை அனைத்தும் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசு துறை வட்டாரத்தில் கேட்ட போது, ஆவணங்களில் உள்ள தாள்கள் அனைத்தும் பழமையானது. அவற்றை தொட்டால் உடைந்து நொறுங்குகிறது. இதனால் கணினிமயமாக்கல் பணிகள் எதுவும் நடைபெறாமல் அப்படியே உள்ளது என்றனர்.

இந்த ஆவணங்களை கணினிமயமாக்கினால் இணையத்தளத்தில் பொதுமக்கள் எளிதில் பார்வையிட்டு வரலாறுகளை அறிந்து கொள்ள முடியும். எனவே இந்த பழமையான ஆவணங்களை கணினிமயமாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments